மட்டக்களப்பு தொடர் கொள்ளைச் சம்பவம்: பெண் உட்பட 6 சந்தேக நபர்கள் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் – வத்தளையில் சிக்கியவருக்கு தடுப்புக் காவல்.
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தி, நகைகளை கொள்ளையிட்ட பின்னர் அவர்களை கிணற்றில் வீசிய கொடூரச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் உத்தரவு பிறப்பித்தார்.
காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண், அவரது 34 வயதுடைய கணவர் மற்றும் 22 வயதுடைய சகோதரர், ஆட்டோ சாரதி ஆகியவரையும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கிய குற்றச்சாட்டில் ஏற்கனவே விளக்கமறியலில் இருந்த இரு நகைக்கடை உரிமையாளர்களும் மீண்டும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
மயக்க மருந்து வழங்கிய குற்றச்சாட்டில் கொழும்பு – வத்தளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நபரை, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பொலிஸ் தடுப்புக் காவலில்3 நாட்கள் வைத்து தொடர்ந்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் வைத்து மயக்க மருந்து கொடுத்து நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட தரப்பினரைக் கொண்டு சந்தேக நபர்களை அடையாளம் காணும் ஆள் அடையாள அணிவகுப்பு இன்று நீதிமன்றத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
மாவட்டத்தையே உலுக்கிய இச்சம்பவம் குறித்து கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சந்தேக நபர்களிடமிருந்து ஏற்கனவே மயக்க மருந்துகள், கார், ஆட்டோக்கள் மற்றும் கோடாரி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் அரங்கேற்றப்பட்ட இந்த மனிதாபிமானமற்ற செயல்கள் குறித்து மேலதிக சாட்சியங்களைத் திரட்டும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

