கந்தளாய் பேராறு கிராமத்திற்கு பொது நூலகம் அவசியம்: உரிய அதிகாரிகளுக்கு மக்கள் வேண்டுகோள்.
கந்தளாய் யூசுப் - Sri Lanka - Reporter for MEIVELI

கந்தளாய் பிரதேசச் செயலகப் பிரிவுக்குட்பட்ட பேராறு கிராமத்தில் பொது நூலகம் அல்லது வாசகசாலை வசதி இல்லாத காரணத்தினால் அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இப்பகுதியில் அதிகளவிலான பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் வாழ்ந்து வரும் நிலையில், தமக்குத் தேவையான மேலதிக வாசிப்புப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கோ அல்லது அமைதியான முறையில் கல்வி கற்பதற்கோ ஒரு பொதுவான இடம் இல்லை என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தற்போதுள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நூலக வசதியைப் பெற்றுக்கொள்வதற்காக பல கிலோமீற்றர் தூரம் பயணம் செய்து, கந்தளாய் நகரப் பகுதிக்குச் செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது. இது பொருளாதார ரீதியாகவும் கால நேர ரீதியாகவும் மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகப் பெற்றோர் சுட்டிக்காட்டுகின்றனர்.
“எமது கிராமத்து மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கும், வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கும் ஒரு வாசகசாலை இன்றியமையாதது. நவீன வசதிகளுடன் கூடிய ஒரு நூலகத்தை எமது பகுதியில் அமைத்துத் தர வேண்டும்” என பேராறு பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
எனவே, இது தொடர்பில் கிழக்கு மாகாண சபை, பிரதேச செயலகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, பேராறு கிராமத்திற்கு நிரந்தரமான வாசகசாலை ஒன்றினை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

