கந்தளாய் பேராறு: விவசாயிகளுக்குக் கை கொடுக்க முன்வருவார்களா அதிகாரிகள்?

கந்தளாய் யூசுப் - Sri Lanka - Reporter for MEIVELI

கந்தளாய், பேராறு பகுதியில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

போஞ்சி, பச்சை மிளகாய், தர்பூசணி மற்றும் வெண்டிக்காய் போன்ற குறுகிய கால பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டு வரும் இப்பகுதி விவசாயிகள், தற்போது தங்களின் பயிர்களில் ஏற்பட்டுள்ள தீவிர நோய்த்தாக்கம் காரணமாக பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

தற்போது பயிர்களில் பரவி வரும் நோய்களைக் கட்டுப்படுத்த முறையான வழிகாட்டல்கள் இன்றி விவசாயிகள் திணறி வருகின்றனர். இப்பகுதிக்கு உரிய விவசாய போதனாசிரியர் (Agricultural Instructor) நியமிக்கப்படாததே தங்களின் இந்த அவல நிலைக்குக் காரணம் என விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

முறையான நிபுணத்துவ ஆலோசனைகள் கிடைக்காததால், இணையதளங்களில் (YouTube) பகிரப்படும் காணொளிகளைப் பார்த்தே தாங்கள் பயிர்களுக்கு மருந்து தெளிப்பதாகத் தெரிவிக்கும் விவசாயிகள், இது பயிர்களுக்குப் பாதுகாப்பானதா அல்லது எதிர்மறையான விளைவுகளைத் தருமா என்ற அச்சத்தில் உள்ளனர்.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு இயங்கும் இப்பகுதி விவசாயிகள், தமது பயிர்ச்செய்கையைப் பாதுகாக்கத் தேவையான நிபுணத்துவ ஆலோசனைகளையும், கண்காணிப்பையும் வழங்க உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.

விவசாயப் போதனாசிரியர் ஒருவரை அப்பகுதிக்கு நியமிப்பது, இப்பகுதி விவசாயிகளின் பொருளாதாரத்தையும், நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த உதவும்.