துருக்கி- இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற கோர விபத்து : சுவிற்சர்லாந்தில் வசித்து வந்த மூன்று ஈழத்தமிழர் பலி

Meiveli Media Team

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில், சுவிற்சர்லாந்தில் வசித்து வந்த மூன்று இலங்கையர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தாயாரின் 60வது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, மீண்டும் சுவிற்சர்லாந்திற்குத் திரும்புவதற்காக விமான நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுவிற்சர்லாந்தின் ஆர்கவ் மாநிலத்தில் வசித்து வந்த ஜெயநந்தினி கணேசலிங்கம், அவரது மகன் விபூசன் கணேசலிங்கம், மற்றும் அவர்களுடன் பயணித்த சிவாஸ்கரன் சுகந்தி , ஆகியோரே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த ஜெயநந்தினி கணேசலிங்கம் அவர்களின் 60வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகவே இவர்கள் துருக்கி நாட்டிற்குச் சுற்றுலா சென்றிருந்தனர். திரும்புவதற்காக டாக்ஸி வாகனத்தில் விமான நிலையத்திற்குப் பயணம் செய்துகொண்டிருந்த வேளையிலேயெ விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் இவர்கள் பயணித்த டாக்ஸி வாகனம் மிகக் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. விபத்தின் கோரத்தினால் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் துருக்கி நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்தான்புல்லின் பெண்டிக் பகுதியில் உள்ள குர்த்கோய் இணைப்புச் சாலையில், காலை நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மழை காரணமாக வழுவழுப்பாக மாறியிருந்த சாலையில் கட்டுப்பாட்டை இழந்த ஒரு டாக்சி கால்வாயில் கவிழ்ந்தது. விபத்தை நேரில் கண்ட குடிமக்களின் தகவல்களைத் தொடர்ந்து, தீயணைப்பு, காவல்துறை மற்றும் மருத்துவக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. வாகனத்தில் சிக்கியிருந்த ஒருவர் அக்குழுவினரால் மீட்கப்பட்டு மருத்துவப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். உயிரிழந்த மூன்று பேரின் உடல்கள் தடயவியல் மருத்துவப் பிணக்கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. இந்தச் சம்பவத்தில் ஒரு சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்ததை சுவிஸ் கூட்டாட்சி வெளியுறவு அலுவலகம் ஓர் அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.