வெறுப்பு பேச்சுக்களை பேசும் அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம்
Meiveli Media Team

வெறுப்பு பேச்சுக்களை பேசும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் போராட்டமொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்று காலை ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், இனவாதம் மற்றும் பிரதேச, சாதிய வாதங்களை பேசும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள், நாட்டின் சமூக ஒற்றுமை, ஜனநாயக பண்புகள் மற்றும் மக்கள் பாதுகாப்பை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பிலுள்ள அரசியல் பிரதிநிதிகள், சமீபத்தில் பொதுத் தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து எங்களது ஆழ்ந்த கவலையையும் கடுமையான கண்டனத்தையும் வலியுறுத்துகிறோம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் மனித மரியாதைக்கு எதிரான சொற்கள் பயன்படுத்தப்படுவது எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இத்தகைய வெறுப்பு தூண்டும் பேச்சுக்கள் சமூகங்களுக்கிடையேயான நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், பிரதேச மற்றும் இன அடிப்படையிலான பிளவுகளை தீவிரப்படுத்துகின்றன. இது நாட்டின் அமைதிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் நேரடி அச்சுறுத்தலாகும். மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்களின் பிரச்சினைகளை பொறுப்புடன், நாகரிகத்துடன் முன்வைத்து தீர்வுகளை உருவாக்க வேண்டியவர்கள். ஆனால், அதற்கு பதிலாக வெறுப்பு, இழிவு மற்றும் பிரிவினை உணர்வுகளை தூண்டும் கருத்துக்களை வெளியிடுவது அரசியல் பொறுப்பின்மையின் வெளிப்பாடாகும். இத்தகைய செயல்கள் ஜனநாயக மரபுகளுக்கும் அரசியல் நாகரிகத்திற்கும் நேரடி அவமதிப்பாகும். மேலும், அரசியல்வாதிகள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தும் போதெல்லாம் ஆதிக்க சிந்தனைகளை பிரதிபலிக்கும் வகையிலான மொழியையும் அணுகுமுறையையும் முற்றாக கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம் என தெரிவித்துள்ளனர்.

