அமெரிக்கா போர் விமானங்களை நிறுத்த அனுமதி மறுத்த ஜனாதிபதி அநுர

Meiveli Media Team

இலங்கை, அம்பாந்தோட்டை மத்தல விமான நிலையத்தில் தமது போர் விமானங்களை தரையிறக்குவதற்கு அமெரிக்கா அனுமதி கோரி இருந்தாலும் அதற்கு

இடமளிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அதற்குரிய நியாயப்பூர்வமான காரணங்களையும் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் இன்று  எடுத்துரைத்தார். ஈரான் கப்பல் விவகாரம் தொடர்பில் எதிரணியால் பொறுப்பற்ற விதத்தில் முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளையும் ஜனாதிபதி நிராகரித்தார். ஜனாதிபதி தமதுரையில் முக்கிய சில விடயங்களைக் கூறினார். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழல் தொடர்பில் இலங்கை மத்தியஸ்தக் கொள்கையையே பின்பற்றி வருகின்றது. இந்த கொள்கையில் இருந்து நாம் விலகப்போவதில்லை. எனினும், நாம் ஒரு தரப்புக்கு சார்பாக செயல்படுகின்றோம் எனவும், முடிவுகள் முறையாக எடுக்கப்படுவதில்லை எனவும் சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். இது அடிப்படையற்ற

குற்றச்சாட்டாகும். 2026 மார்ச் 9 மற்றும் 13 ஆம் திகதிகளில் இலங்கைக்கு நல்லெண்ண அடிப்படையிலான விஜயத்தை மேற்கொள்வதற்கு ஈரானின் கப்பல்களுக்கு அனுமதி வழங்குமாறு 2026 பெப்ரவரி 28 ஆம் திகதி அனுமதி கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்துவந்தது. அன்று மாலையே தமது கடற்படைக்குரிய இரண்டு போர் விமானங்களை இலங்கை மத்தள விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு அமெரிக்கா அனுமதி கோரியது. இவ்வாறு இரு தரப்புகளும் எம்மிடம் கோரிக்கை விடுத்திருந்தன. அக்காலப்பகுதியில் போர்ச்சூழல் ஏற்படும் அபாயமும் இருந்தது. நாம் மத்தியஸ்தக் கொள்கையை பின்பற்றுவதால் அனுமதி வழங்கவில்லை.ஈரான் கப்பலுக்கு ஏன் அனுமதி வழங்கவில்லை என சிலர் கேட்கின்றனர். அவ்வாறு வழங்கி இருந்தால் அமெரிக்க போர் விமானங்களுக்கும் அனுமதி வழங்கி இருக்க வேண்டும்.அவ்வாறு செய்திருந்தால் இலங்கைக்கு தொலைவில் நடக்கும் போர் மத்தவ துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுகம்வரை நெருங்கி இருக்கக்கூடும். நாம் அதற்கு இடமளிக்கவில்லை. நெருக்கடியான சூழ்நிலையிலும் நாம் மத்தியஸ்தக் கொள்கையை பாதுகாத்தோம். ஈரான் கப்பலில் இருந்த மாலுமியொருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சையளிப்பதற்கு உதவி கோரப்பட்டிருந்தது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் உதவ வேண்டும் என்பது சர்வதேச சட்டத்திலுள்ள ஏற்பாடு. அதற்கமைய இடமளிக்கப்பட்டது. இலங்கையின் பொருளாதார மண்டலத்துக்கு அப்பால் உள்ள பகுதியில் ஈரான் கப்பலொன்று தாக்குதலுக்கு இலக்கானது.அப்போதும் சர்வதேச சட்டம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் நாம் உதவினோம் என தெரிவித்தார்.