இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படைக் கப்பல் “JMSDF OONAMI” வெற்றிகரமான பயணத்தை முடித்து புறப்பட்டது

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

​ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையின் (JMSDF) “OONAMI” கப்பல் இலங்கைக்கு மேற்கொண்ட தனது மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை நிறைவு செய்து அண்மையில் கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது. கடந்த மார்ச் 09 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த இந்த 150.5 மீட்டர் நீளமுடைய போர்க்கப்பலுக்கு, இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கு இணங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், அதன் பயண முடிவில் கௌரவமான முறையில் பிரியாவிடையும் வழங்கப்பட்டது.


​இந்த விஜயத்தின் ஒரு முக்கிய அங்கமாக, கப்பலின் கட்டளை அதிகாரியான கமாண்டர் IIO Hiromasa, மேற்கு கடற்படைத் தலைமையகத்தில் மேற்கு கடற்படைத் தளபதியைச் சந்தித்து இருதரப்பு கடல்சார் ஒத்துழைப்பு குறித்து விரிவாகக் கலந்துரையாடினார்.

அத்துடன், கப்பலில் வருகை தந்த குழுவினர் இலங்கையில் தங்கியிருந்த காலத்தில் கொழும்பின் முக்கிய இடங்களைப் பார்வையிட்டதுடன், இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு மற்றும் நட்புறவை மேம்படுத்தும் வகையில் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டத்திலும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இக்கப்பலின் இந்த விஜயமானது, பிராந்திய கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் ஜப்பான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதிலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.