கறுப்பு கொடியேற்றப்பட்ட சம்பவம் : யாழ். பல்கலைக்கழகம் முன்பாக போராட்டம்
Meiveli Media Team

சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி, கறுப்பு கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மாணவர்களிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ். பல்கலைக்கழகம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கறுப்பு கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அந்த வகையில் கடந்த 10ஆம் திகதி, பொலிஸ் வாகனத்தில் பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைந்து, துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் சுமார் மூன்று மணி நேர விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பதிவு செய்தனர். பல்கலைக்கழக வளாகத்தினுள் பொலிஸார் வாகனத்தில் நுழைந்தமை மற்றும் , துணைவேந்தர், பதிவாளர் ஆகியோரிடம் மூன்று மணி நேர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமை போன்றவருக்கு எதிராக மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கறுப்பு கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் மூவரை கடந்த 17ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு பதிவாளர் ஊடாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் அழைப்பாணை வழங்கியுள்ளனர். குறித்த விசாரணைக்கு மாணவர்கள் அன்றைய தினம் செல்லாத நிலையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பணிப்புக்கு அமைய , பல்கலைக்கழக மட்டத்தில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, எமது தரப்பு நியாயங்களை தெளிவாக விசாரணை குழு முன் தெரியப்படுத்தியுள்ளோம். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பிறிதொரு தரப்பினராக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு எம்மை விசாரணைக்கு அழைப்பது மாணவர்களை அச்சுறுத்தும் செயற்பாடாகும். எனவே குறித்த சம்பவம் தொடர்பில் மாணவர்களை பொலிஸார் விசாரணைக்கு அலைக்கும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் வியாழக்கிழமை விரிவுரைகளை பகிஷ்கரித்து பல்கலை முன்றலில் போராட்டத்தை முன்னெடுத்தோம்.

