மத்திய கிழக்கில் நிலவும் போர்: இலங்கை எதிர்நோக்கக்கூடிய பொருளாதார நெருக்கடியை நிர்வகிக்க 3 விசேட குழுகள்
Meiveli Media Team

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக நாடு எதிர்நோக்கக்கூடிய பொருளாதார நெருக்கடியை முகாமைத்துவம் செய்வதற்காக மூன்று விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இந்த விபரங்களை வெளியிட்டார். உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள இந்தப் பதற்றமான சூழ்நிலையில், இலங்கையின் உள்நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் குழு, பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் சேவைகளைத் தடையின்றி வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கும், அந்தச் செயற்பாடுகளை முகாமைத்துவம் செய்வதற்கும் இந்தக் குழு பொறுப்பாக இருக்கும் எனத் தெரிவித்தார். அரசு நிர்வாக முகாமைத்துவக் குழு, தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் அரச சேவைகளை எவ்விதப் பாதிப்புமின்றித் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது தொடர்பான விடயங்களை இந்தக் குழு கவனிக்கும் என்பதோடு, வலுசக்தித் தேவைக் குழு, நாட்டின் மின்சாரம் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட வலுசக்தித் தேவைகளைத் தட்டுப்பாடின்றிப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான திட்டங்களை வகுக்க இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். எதிர்வரும் காலங்களில் விநியோகப் பாதைகளில் ஏற்படக்கூடிய தடைகளை முன்கூட்டியே இனங்கண்டு, மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்தக் குழுக்கள் செயற்படும் எனப் பிரதமர் மேலும் உறுதியளித்தார்.

