அரசாங்கத்தின் வீண் பிடிவாதத்தை கைவிட்டு சர்வகட்சி மாநாட்டை கூட்டுங்கள்: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க அழைப்பு

ச. ஞான‌ பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தனது தனிப்பட்ட கர்வத்தையும் பிடிவாதத்தையும் கைவிட்டு, அனுபவம் வாய்ந்த அனைத்து அரசியல் தரப்புகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி மாநாட்டை உடனடியாகக் கூட்ட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், எரிபொருள் விநியோகத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு நடைமுறை தொடர்பில் அரசாங்கத் தரப்பினர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கி வருவதாகக் குற்றம் சாட்டினார்.

ஆரம்பத்தில் இத்தகைய ஒரு முறையின் அவசியம் இல்லை என்றும், நாட்டில் போதிய எரிபொருள் கையிருப்பில் உள்ளது என்றும் கூறிவந்த அரசாங்கம், நிலைமை கையை மீறி மோசமடைந்த பின்னரே அதே முறையை அமுல்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். தற்போது இந்த நடைமுறையில் உள்ள தொழில்நுட்பச் சிக்கல்களைத் தீர்க்க வேண்டுமானால், முந்தைய ஆட்சிக்காலங்களில் இத்தகைய திட்டங்களை முன்னெடுத்த நிபுணர்களின் ஆலோசனைகளையும் உதவியையும் அரசாங்கம் திறந்த மனதுடன் நாட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், தற்போதைய நெருக்கடியானது உலகளாவிய ரீதியில் நிலவும் போர்ச் சூழலின் ஒரு பாதிப்பு என்பதைச் சுட்டிக்காட்டியதுடன், இவ்வளவு பெரிய பொருளாதாரச் சுமையை ஒரு அரசாங்கத்தினால் மாத்திரம் தனித்து நின்று சமாளிக்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்தினார். நாட்டை மேலும் அதலபாதாளத்திற்குத் தள்ளாமல் இருக்க வேண்டுமானால், அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும் என்றும், இது தாம் ஆட்சியைப் பிடிப்பதற்காக விடுக்கும் கோரிக்கை அல்ல, மாறாக நாட்டைப் பாதுகாப்பதற்காக முன்வைக்கும் நேர்மையான கோரிக்கை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்படலாம் என அரசாங்கம் கூறி வருவதை கடுமையாகச் சாடிய துமிந்த திசாநாயக்க, வருங்காலத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளைக் காரணம் காட்டி இப்போதே விலையை உயர்த்துவது ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை மேலும் இன்னலுக்கு உள்ளாக்கும் செயல் எனத் தெரிவித்தார். ஜே.வி.பி உள்ளிட்ட ஏனைய எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அமெரிக்காவின் தலையீடு குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அவை அவர்களின் தனிப்பட்ட அரசியல் கருத்துக்கள் என்றும், அதற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.