மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்திற்கு மத்தியில் இலங்கைக்கு மற்றுமொரு எரிபொருள் கப்பல் வருகை

ச. ஞான‌ பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையிலும், இலங்கை அரசாங்கத்தினால் முன்பதிவு செய்யப்பட்டிருந்த மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

ஹொங்கொங் நாட்டுக்குச் சொந்தமான ‘சீஃபிரண்டியர்’ (Seafrontier) எனும் இந்த எரிபொருள் கப்பல், இன்று (17) அதிகாலை இலங்கையை வந்தடைந்தது.
இந்தக் கப்பலில் கொண்டுவரப்பட்ட எரிபொருளை தரையிறக்கும் பணிகள் இன்று காலை முதல் கட்டமாக முத்துராஜவெல, கெரவலப்பிட்டி எரிபொருள் முனையத்தில் ஆரம்பிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, கப்பலின் எஞ்சிய எரிபொருள் கையிருப்பினை இறக்குவதற்காக இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தின் ‘டொல்பின்’ (Dolphin Jetty) இறங்குதுறைக்கு கப்பல் கொண்டு வரப்பட்டதுடன், அங்கிருந்து கொலன்னாவ களஞ்சிய முனையத்திற்கு குழாய் வழியே எரிபொருளைச் செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இக்கப்பல் மூலம் 17,000 மெட்ரிக் தொன் ’92 ஒக்டேன்’ பெட்ரோல், 18,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 2,800 மெட்ரிக் தொன் ‘சூப்பர் டீசல்’ ஆகியன நாட்டுக்குக் கிடைத்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தில் சவால்கள் நிலவுகின்ற போதிலும், தற்போதைய இந்த இறக்குமதி நாட்டின் எரிபொருள் தேவையைக் கட்டுப்படுத்தப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.