மக்களைச் சுரண்டி திறைசேரியை நிரப்பும் அரசாங்கம்; எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி தொடர்பில் திஸ்ஸ அத்தநாயக்க கடும் சாடல்

ச. ஞான‌ பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலை ஒரு சாட்டாகப் பயன்படுத்திக்கொண்டு அரசாங்கம் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்க முற்படுவதாகக் குற்றம் சாட்டினார்.

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்று ஜனாதிபதியும் அமைச்சர்களும் ஒருபுறம் கூறிக்கொண்டு, மறுபுறம் எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமை முரணானது என அவர் சுட்டிக்காட்டினார். இலங்கைக்கான எரிபொருள் இந்தியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து பெறப்படுவதாக அரசாங்கம் கூறினாலும், அந்த நாடுகளும் வளைகுடா பிராந்தியத்திலிருந்தே எரிபொருளைப் பெறுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போது நாடு பாரிய எரிபொருள் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக, ஒரு லீட்டர் எரிபொருளைத் துறைமுகத்தில் தரையிறக்க 159 ரூபாய் செலவாகும் நிலையில், அதன் மீது 120 ரூபாய் என்ற பாரிய வரியை அரசாங்கம் அறவிடுவதாகக் குறிப்பிட்ட அவர், எரிபொருள் வரிகளைக் குறைப்பதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இன்று மக்களைச் சுரண்டி திறைசேரியை நிரப்புவதிலேயே குறியாக உள்ளது என்றார்.

அத்துடன், தனியார் எரிபொருள் நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காக விலையை உயர்த்த வேண்டியுள்ளதாக ஜனாதிபதி கூறுவது ஏற்புடையதல்ல என்றும், ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு மக்களைப் பாதுகாப்பதே தவிர தனியார் நிறுவனங்களின் லாபத்தைப் பாதுகாப்பதல்ல என்றும் அவர் காரசாரமாகத் தெரிவித்தார். கடந்த அரசாங்கம் கொண்டு வந்த QR குறியீடு முறையை அன்று கடுமையாக விமர்சித்தவர்கள், இன்று அதே முறையை மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளதோடு, அதன் குறைபாடுகளால் சுற்றுலா மற்றும் கைத்தொழில் துறையினர் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக அவர் சாடினார்.

மேலும், மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளையும் அவர் கடுமையாக விமர்சித்தார். மத்திய கிழக்கு போருக்கும் மின்சாரக் கட்டண உயர்வுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் தரம் குறைந்த நிலக்கரியைப் பயன்படுத்தியதால் ஏற்பட்டுள்ள பாரிய ஊழலையும் தொழில்நுட்பக் கோளாறுகளையும் மறைக்கவே அரசாங்கம் போரை ஒரு காரணமாகக் காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதியால் நாளொன்றுக்கு 130 மெகாவாட் மின்சாரம் தேசியக் கட்டமைப்பிற்கு கிடைக்காமல் போயுள்ளதாகவும், அந்த இழப்பை ஈடுசெய்ய அதிக விலையுள்ள டீசல் மின் உற்பத்தி நிலையங்களை அரசாங்கம் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் ஏற்படக்கூடிய பொருளாதார அபாயங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் முன்கூட்டியே எச்சரித்த போதிலும், அதனை அரசாங்கம் உதாசீனம் செய்து ஏளனம் செய்ததாகத் தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க, இன்று அதன் பாதிப்புகள் இலங்கைக்குத் தெரிய ஆரம்பித்துள்ளதாகக் கூறினார். அத்துடன், திடீரென புதன்கிழமைகளை விடுமுறை தினமாக அறிவித்துள்ள அரசாங்கத்தின் தீர்மானம் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது என்பது தெளிவில்லை என்றும், இவ்வாறான தீர்மானங்கள் நாட்டின் உற்பத்தித் திறனைப் பாதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். எனவே, எரிபொருள் மீதான மேலதிக வரிகளை உடனடியாக நீக்கி, மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என அவர் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கேட்டுக்கொண்டார்.