எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பரப்பப்படும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்: பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை

ச. ஞான‌ பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

​இலங்கையில் தற்போது நிலவி வரும் எரிபொருள் வரிசைகள் மற்றும் தட்டுப்பாடு குறித்த நிலைமை தொடர்பில் பொதுமக்கள் தரப்பிலிருந்து முக்கிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் நிலையங்களில் வரிசைகள் காணப்படுவது ஒரு சாதாரணமான விடயம் அல்ல என்றும், இது உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள யுத்தச் சூழலின் நேரடிப் பின்னடைவு என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு நாட்டின் தோல்வியாக மட்டும் பார்க்காமல், சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியின் ஒரு அங்கமாகவே கருத வேண்டும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

​இதேவேளை, நாட்டின் தற்போதைய இக்கட்டான சூழலைச் சில ஊடகங்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தைப் பரப்பி வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் சக்திகள் மற்றும் முந்தைய ஆட்சியாளர்களை மீண்டும் அதிகாரத்திற்குக் கொண்டுவரத் துடிக்கும் தரப்பினர், இத்தகைய தட்டுப்பாடுகளை ஒரு நாடகமாக அரங்கேற்றி வருவதாகக் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறான தரங்கெட்ட மற்றும் உள்நோக்கம் கொண்ட செய்திகளை மக்கள் காதுகொடுத்துக் கேட்க வேண்டாம் எனவும், உண்மையான ஊடகங்கள் வழங்கும் தகவல்களை மட்டும் பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

​எரிபொருள் விநியோகத்தைச் சீர்செய்ய அறிமுகப்படுத்தப்பட்டுள்ள QR குறியீடு (QR System) முறைமை குறித்துப் பேசிய போது, இது ஒரு மிகச் சிறந்த மற்றும் நீதியான நடைமுறை எனப் பாராட்டப்பட்டது. முன்னைய காலங்களில் ஒரு சிலர் அதிகப்படியான எரிபொருளைப் பெற்றுக்கொண்ட நிலையில், தற்போது இந்த முறையின் மூலம் அனைவருக்கும் சமமான அளவில் எரிபொருள் பகிரப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக்காலத்தில் வலுப்படுத்தப்பட்ட இந்த முறைமை, சாதாரண மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
​நாட்டில் தற்போது போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ள போதிலும், மக்கள் தேவையற்ற முறையில் அச்சமடைந்து அதிக அளவில் எரிபொருளைச் சேமிக்க முயற்சிப்பதாலேயே இத்தகைய நீண்ட வரிசைகள் உருவாகின்றன.

எனவே, மக்கள் பதற்றமடையாமல் நிதானமாகச் செயல்பட வேண்டும் எனவும், அரசியல் லாபத்திற்காகச் செயல்படும் சக்திகளின் சூழ்ச்சிகளுக்குப் பலியாக வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அரசியல் மாற்றங்களை விரும்புவோர் முறையான மக்கள் சேவையின் மூலம் அதிகாரத்தைப் பெற முயற்சிக்க வேண்டுமே தவிர, இத்தகைய குறுக்கு வழிகளைப் பயன்படுத்தக் கூடாது என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.