அரசாங்கம் வீட்டுக்குச் செல்ல இப்போதே தயாராக இருக்குமாறு பலாங்கொட கஸ்ஸப தேரர்  எச்சரிக்கை

Meiveli Media Team

வலுசக்தி காரணமாகவே கோட்டாபய ராஜபக்ஷ வீட்டுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நிலையே அநுர குமார திஸாநாயக்கவுக்கும் ஏற்படும். அதனால் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் அரசாங்கம் வீட்டுக்குச் செல்ல இப்போதே தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என பலாங்கொட கஸ்ஸப தேரர் தெரிவித்தர். திருகோணமலை பெளத்த விகாரை வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கை மின்சாரசபையை தனியார் மயப்படுத்த இடமளிக்கப்போவதில்லை என தெரிவித்து எங்களுடன் இணைந்து போராட்டம் மேற்கொண்டவர்கள் தற்போது அதிகாரத்துக்கு வந்த பின்னர் அரச வளங்களை விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் நாடு இருக்கும்போது, மக்கள் தொடர்ந்து இதனை பார்த்துக்கொண்டிருக்கிறதா என மக்களை கேட்கிறோம். குறிப்பாக மின்சாரசபையை 6 பங்குகளாக பிரித்து விற்பனை செய்வதன் மூலம் இவர்கள் இதனை லாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைப்பதற்கு இவ்வாறு மேற்கொள்வதாக தெரிவித்திருப்பதை நாங்கள் நம்பப்போவதில்லை. லாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவதாக இருந்தால், ஏன் 6 பகுதிகளாக பிரிக்க வேண்டும் என  கேள்வி எழுப்பினார். எனவே வலுசக்தி காரணமாகவே கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கும் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மக்கள் எரிவாயு, எரிபொருளுக்கு வரிசையில் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டதன் பின்னரே மக்கள் வீதிக்கிறங்கி போராட்டம் நடத்தினார்கள். அந்த நிலையே அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் ஏற்படும். அதனால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசாங்கம் வீட்டுக்கு செல்ல இப்போதே தயாராக இருக்குமாறு தெரிவிக்கிறோம். ஏனெனில் நாடு தற்போது பயணிக்கும் போக்கை பார்க்கும்போது எங்களுக்கு நம்பமுடியாமல் இருக்கிறது. 2022 மக்கள் போராட்டத்தின் எஞ்சிய பகுதியை பூரணப்படுத்தவே வெளிநாட்டு புலனாய்வு சக்திகள் தற்போது செயற்பட்டு வருகின்றன. ஜனாதிபதி அநுரகுமார இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து, இந்தியாவை நம்பினாலும் இலங்கையின் பின்னால் குத்தியே ஈரான் கப்பலை இலங்கைக்கு அனுப்பி அமெரிக்காவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கையை இந்த யுத்தத்துடன் நேரடி மோதலுக்கு இட்டுச்செல்லவே இந்தியா முயற்சித்தது. என்றாலும் அதிர்ஷ்டவசமாக அது அவ்வாறு இடம்பெறவில்லை. ஆனாலும் அமெரிக்காவும் ஈரானும் எங்களுடன் வைராக்கித்துடனே இருக்கின்றன. அதனால் அரசாங்கம் உடனடியாக புலனாய்வு துறையை பலப்படுத்தி செயற்படுத்த வேண்டும். அரசாங்கத்துக்கு என்ன செய்ய வேண்டும் என தெரியாமல் இருக்கிறது. அதனால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.