QR குறியீடு ஊடாக மாத்திரம் எரிபொருள்: எரிபொருள் நிலையங்களில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை
ச. ஞான பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

எரிபொருள் நிலையங்களில் நிலவும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நாடு தழுவிய ரீதியில் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி, பிரதிப் பொலிஸ் மா அதிபர் W.P.J. சேனாதீர தெரிவித்துள்ளார்.
வாகன வகைகளுக்கு ஏற்ப அறிமுகப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமைக்கு அமைய மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்பட வேண்டும் என அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, வரிசையை மீறி இடையில் புகுந்து எரிபொருள் பெற முயற்சிப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தற்போது அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மேலதிக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் ஏற்படக்கூடிய தேவையற்ற மோதல்களைக் குறைப்பதற்கு பொலிஸாருக்கு விசேட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதோடு, முறையற்ற விதத்தில் எரிபொருள் வழங்குவதைத் தவிர்க்குமாறு எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், எரிபொருள் வரிசைகளுக்காக மோட்டார் சைக்கிள்களை நடைபாதைகளில் நிறுத்தி வைப்பது பாதசாரிகளுக்கு பெரும் இடையூறாக அமைவதாகவும், அவ்வாறான செயல்களைத் தவிர்க்குமாறும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போதைய எரிபொருள் நெருக்கடியானது உலகம் முழுவதும் நிலவும் ஒரு சூழல் என்பதை வலியுறுத்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர், மக்கள் சட்டத்தையும் ஒழுங்கையும் மதித்து நடப்பதன் மூலம் தேவையற்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க முடியும் எனத் தெரிவித்தார்.

