ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன இராணுவத் தளமாக இருப்பது இந்தியப் பெருங்கடலில் வெளிநாட்டு இராணு அச்சுறுத்தல்களுக்கு வழிவகுக்கும்: இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவிப்பு
Meiveli Media Team

ஈரான் கடற்படையின் தென் பிரிவுக்குச் சொந்தமானதும், ஓமான் வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணையில் நிலைநிறுத்தப்பட்டதுமான ‘மௌஜ்’ரகப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டமையானது, இந்தியப் பெருங்கடலில் பெரும் குழப்பத்தை விளைவிக்கும் நோக்கில் திட்டமிடப்பட்ட ஒன்றாகும். இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒரு சீன இராணுவத் தளமாக அடையாளப்படுத்தியதுடன், இது இந்தியப் பெருங்கடலில் வெளிநாட்டு இராணுவங்களின் அச்சுறுத்தல்மிக்க பிரசன்னத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும் தெரிவித்தார்.
இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் , காலி கடற்பரப்பிற்கு அப்பால் ஈரானியப் போர்க்கப்பலான ‘ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா’அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கே ஜெய்சங்கர் இவ்வாறு பதிலளித்தார். இப்பிராந்தியத்தின் ‘நிகர பாதுகாப்பு வழங்குநராக’ இந்தியா விளங்கும் நிலையில் இச்சம்பவம் குறித்து அவரிடம் வினவப்பட்டது. புதுடெல்லியில் மார்ச் 5 முதல் 7 வரை நடைபெற்ற ‘ரைசினா கலந்துரையாடல் 2026 மாநாட்டிலேயே இக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இந்தக் கேள்வி இந்திய வெளிவிவகார அமைச்சரை சற்றே சங்கடத்திற்குள்ளாக்கியது. இந்தியப் பெருங்கடலின் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளுமாறு நெறியாளர் பக்லி சர்மா உபாத்யாயவிடம் கோரிய ஜெய்சங்கர், கடந்த ஐந்து தசாப்தங்களாக டியேகோ கார்சியாவில் அமெரிக்க – பிரித்தானிய கூட்டுப் பிரசன்னம் காணப்படுவதைச் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, 2017 இல் கிழக்கு ஆப்பிரிக்காவின் ஜிபூட்டியில் சீனாவின் முதலாவது வெளிநாட்டு இராணுவத் தளம் அமைக்கப்பட்டதையும், அதே காலப்பகுதியில் சர்ச்சைக்குரிய சூழலில் 1.2 பில்லியன் டொலர் செலவில் 99 வருட குத்தகைக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா பொறுப்பேற்றதையும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட சீனத் திட்டங்களைத் தடுக்க இந்தியா எடுத்த முயற்சிகளையும் மீறி சீனா இதில் வெற்றி பெற்றிருந்தது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட நீர்மூழ்கிக் கப்பல் ‘வர்ஜீனியா’ ரகத்தைச் சேர்ந்த யுஎஸ்எஸ் மினசோட்டா என பரவலாக நம்பப்படுகிறது. சர்வதேச செய்தி நிறுவனங்களின்படி, இதில் மூன்று ஆஸ்திரேலிய கடற்படை அதிகாரிகளும் அடங்கியிருந்தனர். எனினும், சில தரப்பினர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது அமெரிக்க கடற்படையின் அதிவேக தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலான யுஎஸ்எஸ் சார்லட் எனத் தெரிவிக்கின்றனர். மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்திய இராணுவ நடவடிக்கைகளுக்கு டியேகோ கார்சியா முக்கிய மையமாக உள்ளது. அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடும் ‘குவாட்’ கூட்டணியின் அங்கத்துவ நாடுமான இந்தியா, கடந்த அக்டோபரில் டியேகோ கார்சியாவிலிருந்து, கடல்சார் கண்காணிப்பு விமானங்களை இயக்கியதை ஜெய்சங்கர் வெளிப்படுத்தவில்லை. அமெரிக்க – இந்திய – இஸ்ரேல் உறவுகள் வலுவடைந்து வருவதுடன்இ அமெரிக்க – இலங்கை பங்காளித்துவமும் அதிகரித்து வருகின்றது என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

