’டிட்வா’ சூறாவளியினால் வீழ்ச்சியடைந்த கைத்தொழில்களை மீட்டெடுக்கக் கைகொடுத்த ஜாம்பவான்களுக்கு கௌரவிப்பு
ச. ஞான பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

2025 நவம்பர் மார்ச் இறுதியில் இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி காரணமாக நாட்டின் உற்பத்தித் துறைக்கு ஏற்பட்ட பாரிய பொருளாதார பாதிப்பிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்காக, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு மற்றும் தொழில் அபிவிருத்திச் சபை (IDB) இணைந்து முன்னெடுத்த ‘கைத்தொழில் மறுமலர்ச்சி அனுசரணைத் திட்டத்தின்’ (Industry Recovery Foster Program – IRFP) முதற்கட்டம் நேற்று (10) வெற்றிகரமாக நிறைவடைந்தது.
கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாதிக்கப்பட்ட 43 கைத்தொழில் நிறுவனங்களுக்குத் துணையாக நின்ற நாட்டின் முன்னணி தனியார் நிறுவனங்கள் பல கௌரவிக்கப்பட்டன.

அரசு-தனியார் பங்களிப்பின் கீழ் 2025 டிசம்பரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த IRFP திட்டத்தின் கீழ், பேரிடர் காலத்தில் தனியார் துறை வழங்கிய மகத்தான ஒத்துழைப்பைக் கைத்தொழில் அமைச்சு இதன்போது விசேடமாகப் பாராட்டியது.

அத்துடன், பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள் தொடர்பான தரவுத்தளத்தை உருவாக்குவதற்கும், தொழில்நுட்ப உதவிகளை வழங்கி ‘கைத்தொழில் பேரிடர் உதவி மையத்தை’ (IDSC) நிறுவுவதற்கும் முன்வந்து உதவிய Cloud Syntex (Pvt) Ltd நிறுவனத்தின் திலிண குருகுலசூரிய, Floodsupport.org இன் ரங்க தயாவன்ச, eLearning.lk நிறுவனத்தின் சஞ்சய அல்விட்டிகல மற்றும் சஜீவன் சசிந்தானந்தன் ஆகியோரும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
ஆரம்பகட்ட மதிப்பீடுகளின்படி, ‘டிட்வா’ சூறாவளியினால் உற்பத்தித் துறைக்கு ஏற்பட்டுள்ள மொத்தப் பொருளாதார இழப்பு 33.96 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் அதிகப்படியான பாதிப்பு மூலப்பொருட்கள் மற்றும் இருப்புக்களுக்கு (10.2 பில்லியன் ரூபா) ஏற்பட்டுள்ளதோடு, வருமான இழப்பு மற்றும் இயந்திரக் கோளாறுகளும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக தொழிற்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியமையால் இயந்திரங்கள் செயலிழந்தமை மற்றும் விநியோகச் சங்கிலி முறிந்தமை போன்றவை முக்கிய சவால்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
தற்போது நிறைவடைந்துள்ள மீட்புத் திட்டத்தைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் இக்கைத்தொழில்களை மேலும் அபிவிருத்தி செய்வதற்காக ‘கைத்தொழில் அபிவிருத்தி அனுசரணைத் திட்டம்’ (IDFP) நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, மேலதிக செயலாளர் அனோஜா ஹேரத் மற்றும் John Keells Holdings, Expo Lanka, Nestle Lanka, Unilever, Toyota Lanka, Hayleys, MAS Holdings, HEMAS, Prima Group, DIMO, Brown & Company, CBL, Tokyo Cement, Hirdramani International மற்றும் Brandix ஆகிய முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.


