அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு பயப்படுககிறது அனுர அரசு:   ஐக்கிய மக்கள் சக்தி சாடல்

Meiveli Media Team

எதிர்க்கட்சியில் இருந்தபோது அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிராகக் கூச்சலிட்டவர்கள், இன்று அந்த நாடுகளுக்குப் பயந்து ஒவ்வொரு தீர்மானங்களையும் எடுக்கின்றனர் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நாட்டின் கௌரவத்தை இந்தியாவிடமும் அமெரிக்காவிடமும் அடகு வைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குற்றஞ்சுமத்தினார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய வெளிவிவகார அமைச்சர் சர்வதேச மட்டத்தில் நாட்டைப் பெரும் சங்கடத்துக்கு உள்ளாக்கியிருப்பதாகக் கடுமையாகக் விமர்சிக்கப்படுகிறது. எதிர்க்கட்சியில் இருந்தபோது அப்போதைய அமைச்சர்களைக் கேலி செய்த ஜே.வி.பி அணியினர், இன்று ஆட்சியில் அமர்ந்ததும் சர்வதேச ரீதியில் நாட்டை ஒரு நகைச்சுவைப் பொருளாக மாற்றியுள்ளனர். அமைச்சருக்கு ஆங்கிலத்தில் உரையாற்றத் தெரியாவிட்டால்,  சிங்கள மொழியில் பேசி ஒரு மொழிபெயர்ப்பாளரைப் பயன்படுத்தியிருக்கலாம்.அது நாட்டின் கௌரவத்தைப் பாதுகாத்திருக்கும். ஆனால், தெரியாத மொழியில் பேசி சர்வதேச அரங்கில் இலங்கையைத் தாழ்த்தியிருக்கின்றார் என்றும் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார். ஊழல்களைக் கண்டறிய வேண்டிய பொறுப்பில் உள்ளவர், அரசாங்கத்தின் தவறுகளைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டுள்ளார்கள். இந்த அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை ஒரு நாடோடி கொள்கையைப் போன்றுள்ளது. எதிர்க்கட்சியில் இருந்தபோது அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிராகக் கூச்சலிட்டவர்கள், இன்று அந்த நாடுகளுக்குப் பயந்து ஒவ்வொரு தீர்மானங்களையும் எடுக்கின்றனர் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.