அரசாங்கத்தின் ஊழல்களை மறைக்க ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது – முன்னாள் எம்.பி துஷார இந்துனில்

ச. ஞான‌ பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலத்திற்குள் பாரிய ஊழல் மோசடிகளில் சிக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் குற்றம் சுமத்தியுள்ளார். இன்று (26) எதுல்கோட்டேயிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கொள்கலன் விடுவிப்பு மோசடி, தரமற்ற மருந்துகள் மற்றும் தரமற்ற நிலக்கரி இறக்குமதி என வரிசையான ஊழல்கள் இந்த ஆட்சியில் இடம்பெற்றுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், குறிப்பாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தரமற்ற நிலக்கரியைக் கொண்டு வந்ததன் மூலம் நாட்டுக்கு சுமார் 3026 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கப்பல்கள் மூலம் நேரடியாக ஏற்பட்ட 2796 மில்லியன் ரூபாய் நட்டமும், மேலதிக பராமரிப்புச் செலவான 230 மில்லியன் ரூபாயும் இதில் அடங்குவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த நட்டத்தினால் மின் உற்பத்தி குறைந்துள்ளதோடு, அதனை ஈடுகட்ட டீசல் மின் நிலையங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் மேலதிக சுமை மார்ச் மாதம் முதல் மின்சாரக் கட்டண உயர்வு என்ற பெயரில் அப்பாவி மக்கள் மீது சுமத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலக்கரி மோசடியை அரசாங்கத்தின் அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களைக் கூறி மூடிமறைக்க முயற்சிப்பதாகத் தெரிவித்த அவர், இதற்குப் பொறுப்பேற்று பாடவிடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இவ்வாறான பாரிய நிதி மோசடிகள் மற்றும் அரசாங்கத்தின் தோல்விகள் குறித்து மக்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்தியைத் திசைதிருப்புவதற்காகவே, தற்போது ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் மீண்டும் கையில் எடுத்துள்ளதாக அவர் சாடினார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது 2025 ஏப்ரல் 21-ஆம் திகதிக்குள் ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளைக் கண்டறிவதாக வாக்குறுதி அளித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய நிலையில், தற்போது முன்னாள் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளைக் கைது செய்வது ஒரு அரசியல் நாடகம் மாத்திரமே என அவர் விமர்சித்தார். ஈஸ்டர் தாக்குதலை ஒரு தேர்தல் கருவியாகப் பயன்படுத்தாமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உண்மையான வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

அதேபோன்று விவசாயத் துறையிலும் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட துஷார இந்துனில், நெல்லுக்கு அரசாங்கம் ஒரு நிர்ணய விலையை அறிவித்திருந்த போதிலும், நடைமுறையில் விவசாயிகள் தமது விளைச்சலை 80 முதல் 85 ரூபாய் போன்ற மிகக் குறைந்த விலைக்கு தனியார் மில் உரிமையாளர்களுக்கு விற்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார். அரசாங்கத்தின் நெல் கொள்வனவுச் செயற்பாடு மிகவும் மந்தகதியில் உள்ளதால் விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமே எவ்வித ஊழல் குற்றச்சாட்டுகளும் அற்ற, டீல் அரசியலில் ஈடுபடாத ஒரே தூய்மையான அரசியல் சக்தியாகத் திகழ்வதாகக் குறிப்பிட்ட அவர், சஜித் பிரேமதாசவின் தலைமையில் நாட்டின் வளங்களைச் சூறையாடும் இந்த அரசாங்கத்திற்கு எதிராக நாடாளுமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பப்போவதாகவும் அவர் மேலும் உறுதிபடத் தெரிவித்தார்.