“மக்கள் குரல்” கூட்டணிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் கொழும்பில் விசேட அரசியல் சந்திப்பு!

ச. ஞான‌ பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

இருபதுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய “மக்கள் குரல்” (Mahajana Handa) அமைப்பின் தலைவர்களுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (பெப். 18) முற்பகல் பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கட்சியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல ராஜபக்ஷ, பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், சி.பி. ரத்நாயக்க மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதேவேளை, “மக்கள் குரல்” கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் மஹிந்த அமரவீர, பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவர் டிரான் அலஸ் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றனர்.
பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் நேரடித் தலையீட்டின் பேரில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பேராசிரியர் பீரிஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் குழுவினர் அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த பின்னணியில் இச்சந்திப்பு முக்கியத்துவம் பெறுகின்றது. இன்றைய கலந்துரையாடலின் போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் எதிர்கால அரசியல் முன்னெடுப்புகள் குறித்து இரு தரப்பினரும் நீண்டநேரம் விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த கட்சிகள் உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பங்கேற்புடன் கடந்த ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடை நகரில் “மகா ஜன ஹன்ட” (பெரும் மக்கள் குரல்) எனும் பெயரில் பாரிய மக்கள் பேரணி ஒன்று நடத்தப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.