க.பொ.த. (சாதாரண தர) பரீட்சை – 2025 (2026)
ச. ஞான பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சை – 2025 (2026), இம்முறை பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடத்துவதற்கு இலங்கை பரீட்சைத் திணைக்களம் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது.
இம்முறை பரீட்சைக்காக 382,249 பாடசாலை பரீட்சார்த்திகளும், 69,214 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் என மொத்தம் 451,463 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். க.பொ.த. (சாதாரண தர) பரீட்சை – 2025 (2026) இற்காக 3,545 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், பரீட்சை நடவடிக்கைகளுக்காக 531 ஒருங்கிணைப்பு நிலையங்களும் 33 பிரதேச சேகரிப்பு நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.
இரத்மலானை, தங்காலை, மாத்தறை, சிலாபம், வத்தரெக்க சுநீத வித்தியாலயம், மகரகம அபெக்ஷா வைத்தியசாலை மற்றும் கைதடி நுபீல்ட் (Nuffield) விசேட பாடசாலை ஆகியன விசேட பரீட்சை நிலையங்களாக செயற்படும்.
பரீட்சை நடைபெறும்போது தேவையான பாதுகாப்பினைப் பொலிஸாரும் முப்படையினரும் வழங்குவதுடன், ஏதேனும் அனர்த்த நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் அவற்றை எதிர்கொள்வதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தொடர்ச்சியாகச் செயற்படும்.
பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக பின்வரும் ஆவணங்களைப் பயன்படுத்தலாம்:
தேசிய அடையாள அட்டை
செல்லுபடியாகும் கடவுச்சீட்டு
செல்லுபடியாகும் வாகன சாரதி அனுமதிப்பத்திரம்
பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையத்திற்கு வரும்போது கைத்தொலைபேசிகள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் (Smart watches), இலத்திரனியல் சாதனங்கள், கணிப்பான்கள் (Calculators), அழிப்பான் திரவங்கள் (Eraser fluid) மற்றும் குறிப்புப் புத்தகங்கள் போன்றவற்றைக் கொண்டுவருவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.
இப்பரீட்சைக்குத் தோற்றும் விசேட தேவையுடைய பரீட்சார்த்திகளுக்கு, முன்னதாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு, நேர்முகப் பரீட்சைகள் மற்றும் மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்ததன் பின்னர் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பரீட்சார்த்திகளும் தமக்கு வழங்கப்பட்டுள்ள கால அட்டவணைக்கு அமைய, பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக உரிய பரீட்சை நிலையத்திற்கு வருகை தர வேண்டும். பரீட்சை விதிகளுக்கு அமைய, பரீட்சைப் பணியாளர்களினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றிச் செயற்படுதல் அவசியமாகும்.

