ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது: முதல்வர் ஸ்டாலின் தெரிவிப்பு

Meiveli Media Team

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணியில் ஆட்சி பங்கு கோரும் சிலரை மறைமுகமாக சாடியுள்ளார். ‘ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது. இது எங்களுக்கும் தெரியும், அவர்களுக்கும் தெரியும். கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த இடையில் சிலர் திட்டமிட்டு சதி செய்கிறார்கள்’ என்று அவர் வெளிப்படையாக தெரிவித்தார். இந்தப் பேச்சு கூட்டணி கட்சிகளிடையே ஏற்படும் சில கோரிக்கைகள் மற்றும் பதட்டங்களை குறிப்பதாக பார்க்கப்படுகிறது.

திராவிட மாடல் ஆட்சியின் வெற்றிப் பயணம் தொடரும் என்று முதலமைச்சர் உறுதியளித்தார். ‘திராவிட மாடல் ஆட்சியின் வெற்றிப்பயணத்தில் தமிழ்நாடு வரலாறு காணாத வகையில் வெற்றிநடை போட்டுச் செல்கிறது. இந்த வெற்றிப்பயணம் திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும் தொடரும்’ என்று அவர் பேசினார். கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு பல குடும்பங்களின் தலையெழுத்தை மாற்றியுள்ளதாகவும், இந்தப் பயணம் தொடரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மக்கள் நம்பிக்கை திமுக அரசின் மீது அதிகரித்து வருவதாக முதலமைச்சர் கூறினார். ‘திமுக அரசு தொடர்ந்தால்தான் தமிழ்நாடு நன்றாக இருக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். பல நன்மைகளைச் செய்துவரும் தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு பல நெருக்கடிகளைக் கொடுத்து, துரோகத்தையும் அநீதியையும் செய்து வருகிறது’ என்று அவர் சாடினார். ஒன்றிய அரசின் அணுகுமுறைக்கு எதிராக தமிழக மக்கள் திமுகவுடன் நிற்கிறார்கள் என்றும் அவர் வலியுறுத்தினார். தமிழ்நாடு உலக அரங்கில் தனித்துவமான அடையாளத்தைப் பெற்றுள்ளதாக முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். ‘எலக்ட்ரானிக்ஸ், மோட்டார் வாகனம், ஐரி, ஜவுளித்துறை, என்று பன்முகப்படுத்தப்பட்ட மாநிலமாக உலக அரங்குகளில் தமிழ்நாடு தன்னை அடையாளப்படுத்தியுள்ளது’ என்று அவர் குறிப்பிட்டார். தொழில்துறை வளர்ச்சி, முதலீடு ஈர்ப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதை இது காட்டுகிறது என்றும் அவர் சொன்னார்.