இந்துக் கல்லூரி கொழும்பிங நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆளுநரினால் திறந்து வைப்பு

ச. ஞான‌ பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

​இந்துக்கல்லூரி கொழும்பின் 75-வது ஆண்டு பவள விழா கொண்டாட்டங்களின் ஒரு அங்கமாக, மாணவர்களின் நலன் கருதி அமைக்கப்பட்ட மணித்தியாலத்திற்கு 500 லீற்றர் நீரைச் சுத்திகரிக்கும் திறன் கொண்ட நவீன RO குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்துக்கல்லூரி கொழும்பின் பழைய மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், மேல் மாகாண ஆளுநர் கௌரவ ஹனீப் யூசுப் அவர்கள் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு நிலையத்தைத் திறந்து வைத்தார்.

​இந்தத் திட்டமானது சென்னை மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ‘லைஃப் ஹெல்ப்’ (Life Help) நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக தென்னிந்தியாவிற்கான இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி கணேசநாதன் கேதீஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக இந்திய லைஃப் ஹெல்ப் மையத்தின் திரு. பிளேஸ் கண்ணன் மற்றும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் பொறியியலாளர் ஏ. கே. அப்துல் ஜப்பார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

​கல்லூரி அதிபரின் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

1951 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரையிலான கல்லூரியின் 75 ஆண்டுகால வரலாற்றில், மாணவர்களின் அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் இத்திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையப் பெற்றுள்ளது.