இந்துக் கல்லூரி கொழும்பின் 75-ஆவது ஸ்தாபகர் தின பவள விழா கொண்டாட்டங்கள் கோலாகலம்
ச. ஞான பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

இலங்கையின் முன்னணித் தமிழ்ப் பாடசாலைகளில் ஒன்றான இந்துக் கல்லூரி கொழும்பின் 75-ஆவது ஸ்தாபகர் தின பவள விழா கொண்டாட்டங்கள், இன்று (பெப்ரவரி 12) கல்லூரி வளாகத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
கல்லூரி அதிபர் இளையதம்பி இலங்கேஸ்வரன், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு, முற்பகல் 10.30 மணியளவில் மங்கல விளக்கேற்றலுடன் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் தொடங்கியது.

இந்நிகழ்வில் முதன்மைய விருந்தினராக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (கல்விச் சேவைகள்) திரு. A.K.K.P. ஆரியசிங்க அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், கௌரவ விருந்தினராக கல்வி அமைச்சின் தமிழ் பாடசாலை அபிவிருத்திக் கிளைக் கல்விப் பணிப்பாளர் திரு. S. பிரணவதாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன் பாடசாலையின் வளர்ச்சிக்குத் துணையாக நிற்கும் பல துறைசார் வல்லுநர்களும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
விழாவின் தொடக்கத்தில் வரவேற்பு நடனம், பக்திப் பாடல்கள் மற்றும் ஸ்தாபகர் கீதம் ஆகியவை இசைக்கப்பட்டு விழா களைகட்டியது. இதனைத் தொடர்ந்து, கல்லூரியின் 75 ஆண்டு கால கல்விப் புரட்சியையும், சமூகத்திற்கு ஆற்றிய மகத்தான சேவையையும் வரலாற்றில் நிலைநிறுத்தும் வகையில், ஒரு விசேட நினைவுத் தபால் முத்திரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.
இத்தருணமானது கல்லூரியின் பெருமைமிகு அடையாளத்தை உலகளாவிய ரீதியில் கொண்டு செல்லும் ஒரு மைல்கல்லாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து, பாடசாலையின் பழைய மாணவரும் ஐடிஎம் நேசன் கெம்பஸின் (IDM Nation Campus) தலைவருமான கலாநிதி விநாயகமூர்த்தி ஜனகன் அவர்கள், கல்லூரியின் எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்காக ஒரு மில்லியன் ரூபாய் (ரூ. 1,000,000) பெறுமதியான காசோலையினை பாடசாலை அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். தனது தாய் நிறுவனத்திற்கு அவர் ஆற்றிய இந்த உதவி அங்கிருந்த அனைவரதும் பாராட்டுக்களைப் பெற்றது.
மேலும், நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கல்லூரியின் செயல்பாடுகளை உலகெங்கும் வாழும் பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளுடன் இணைக்கும் நோக்கில், புதிய உத்தியோகபூர்வ இணையதளமும் இதன்போது அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
அதிநவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் தளத்தின் ஊடாக கல்லூரியின் வரலாறு மற்றும் சாதனைகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும். இதனைத் தொடர்ந்து கல்லூரியின் வளர்ச்சிக்குப் பங்காற்றிய முன்னாள் அதிபர்கள் மற்றும் பழைய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதோடு, கல்லூரியின் வரலாற்றுப் பயணத்தைச் சித்தரிக்கும் இரண்டு ஆவணப்படங்களும் திரையிடப்பட்டன.
நிகழ்வின் இறுதியாக மாணவர்களின் கலைத் திறமைகளை வெளிப்படுத்தும் இசை நிகழ்ச்சி இடம்பெற்றதுடன், நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பவள விழா நிகழ்வில் பெருந்திரளான பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

