கொடூரமான பாலியல் செயலுக்காக பயன்படுத்தப்பட்ட சிறுமிகள்: எப்ஸ்டீன் ஆவண சர்ச்சையில் இலங்கைபற்றி கேள்வி எழுப்பிய தமிழ் தேசிய மறுமலர்ச்சி இயக்கத்தின் சட்டத்தரணி உமாகரன் இராசையா

Meiveli Media Team

கொடூரமான யுத்தம் நடந்த இந்த நாட்டில் அதிகார வர்க்கத்தால் சிறுவர்கள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டார்களா இல்லையா என்பதை சொல்லவேண்டிய பொறுப்பும் கடமையும் இந்த அரசாங்கத்திற்கு இருக்கின்றது என தெரிவித்த தமிழ் தேசிய மறுமலர்ச்சி இயக்கத்தின் சட்டத்தரணி உமாகரன் இராசையா, கடந்த காலத்தில் நடைபெற்ற காணாமல் ஆக்கப்படுதல்களுக்கு யுத்தத்தை மட்டும் காரணமாக பார்க்க முடியாது என்றார்.

சர்வதேச ரீதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள எப்ஸ்டீன் ஆவணங்கள் தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே உமாகரன் இராசையா இவ்வாறு கேள்வி எழுப்பினார். அமெரிக்காவில் கரீபியன் தீவுகளில் 13 தொடக்கம் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் கடத்தப்பட்டு உலகத் தலைவர்கள் பலராலும்  பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு இயற்கைக்கு முரணான விதத்தில் பாலியல் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள். நரபலி சம்பந்தமாகவும் பேசப்படுகிறது. இந்த ஆவணங்களைப் பொறுத்த வரைக்கும் இலங்கை என்ற சொற்பதம் 188 இடங்களில் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் எல்லாமே குற்ற செயல்களுடன் தொடர்புடையது என்று எப்படி சொல்ல முடியாதோ அதே நேரம் தொடர்பில்லை என்றும் சொல்ல முடியாது. இது தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். இலங்கையைப் பொறுத்த வரைக்கும் 1958 ம் ஆண்டு முதல் தடவையாக அரசியல் குற்றமாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்படுகிறார்கள். இது முதல் தடவையாக அரசியல் குற்றமாகவும் காணாமல் ஆக்கப்படுதலாகவும் பார்க்கப்படுகிறது. சுதந்திரத்திற்கு பிறகு இலங்கை அரசியலில் 1958 தொடக்கம் 2026 ஆம் ஆண்டு வரைக்கும் அதிகமாக காணாமல் ஆக்கப்படுதல் நடந்து வருகிறது. எப்ஸ்டீன் ஆவணங்கள் உலக அரங்கில் ஒரு விடயத்தை சொல்லி இருக்கிறது. மிகக் கொடூரமான பாலியல் செயலுக்காக சிறுவர்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்ற சிறுவர்கள் சிறுமிகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக அரசியல் சார்ந்த குற்றமாக மட்டும் வைத்து விசாரணை செய்ய முடியாது. 2009ல் இருந்து 2026 ஆண்டு வரையான காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர் சிறுமிகயருக்கு என்ன நடந்தது என்று விசாரணையில், பாலியல் சுரண்டல் ரீதியாகவும் மனித ஆட் கடத்தல் ரீதியாகவும் இந்த அரசு விசாரணை செய்ததா என்ற கேள்வியை எழுப்புகிறேன்.

அதிகம் பாதிக்கப்பட்ட தரப்பே தற்போது ஆட்சியில் இருக்கின்ற ஜே.வி.பி.யாகும். ஆகவே மிகப்பெரிய பொறுப்பும் கடப்பாடும் இந்த விசாரணையை செய்யும் பொறுப்பும் அவர்களுக்கு உண்டு என.று அவர் தெரிவித்துள்ளார். 23 ஆயிரம் பேரை காணவில்லை என்று காணாமல் போனோருக்கான அலுவலகம் கூறியுள்ளது. இங்கு சில தரவுகளின் படி இதில் 10 சதவீதமானோரை சிறுவர்களாகக் கருத முடியும் என்றம் அவர் குறிப்பிட்டார்.