அரசாங்கம் வாக்குறுதிகளை மீறி அடக்குமுறையை கையில் எடுத்துள்ளது: முஜிபுர் ரஹ்மான் சாடல்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதுடன், மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்காக அவசரகாலச் சட்டத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமைப் பணிமனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், தபால் முத்திரைக்கான குறைந்தபட்ச கட்டணத்தை 70 ரூபாவாக உயர்த்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானமானது தபால் சேவையை மேலும் வீழ்ச்சியடையச் செய்யும் செயல் எனச் சுட்டிக்காட்டினார். தொழில்நுட்ப வளர்ச்சியால் பாரம்பரிய கடிதத் தொடர்பு குறைந்துள்ள நிலையில், சேவையின் தரத்தை உயர்த்தாமல் கட்டணங்களை அதிகரிப்பது தபால் திணைக்களத்தை முடக்கும் முயற்சி என அவர் விமர்சித்தார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில், ஆறு மாதத்திற்கு ஒருமுறை சம்பளம் உயர்த்துவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி, இப்போது 2027 வரை சம்பளத்தை உயர்த்த முடியாது என அறிவித்துள்ளமையானது மக்களை ஏமாற்றும் செயலாகும் என அவர் குறிப்பிட்டார். அரசாங்கத்தின் இத்தகைய தீர்மானங்களால் சமூகத்தில் பாரிய குழப்பநிலை ஏற்பட்டுள்ளதுடன், மருத்துவர்கள், மீனவர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தற்போது போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர ஒத்துழைத்த குழுக்களே இன்று அரசாங்கத்துடன் மோதும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த மக்கள் எதிர்ப்பை முறியடிக்கவே அவசரகாலச் சட்டத்தை மீண்டும் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
சூறாவளி நிலைமையைக் காரணம் காட்டி முன்னர் கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டம், தற்போது நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ள போதிலும் நீடிக்கப்படுவது தேவையற்றது என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியில் இருந்தபோது அடக்குமுறைச் சட்டங்களை எதிர்த்த தேசிய மக்கள் சக்தி, இன்று ஆட்சியில் அமர்ந்தவுடன் அதே சட்டங்களை மக்கள் போராட்டங்களை ஒடுக்கப் பயன்படுத்துவது அவர்களின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துவதாகவும் அவர் சாடினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளைக் கண்டறிவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், தற்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தயாரிக்கப்பட்ட சாட்சிப் பட்டியலையே பின்பற்றி வருவதாகத் தெரிவித்தார். உண்மையான குற்றவாளிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த விடயத்தில் ராஜபக்ஷக்களுடன் தற்போதைய அரசாங்கம் உடன்பாட்டுடன் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
அரசாங்கம் தனது தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சி மீது பழிசுமத்துவதை விடுத்து, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்வர வேண்டும் என்றும், மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கத்தின் வாக்கு வங்கி சரிந்துள்ளமை தெளிவாகத் தெரியும் என்பதால் அவர்கள் தேர்தலை நடத்தத் தயங்குவதாகவும் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்

