டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சிறு கைத்தொழிலாளர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்களுக்கு 12.6 மில்லியன் ரூபா இழப்பீடு
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

டித்வா சூறாவளியால் வவுனியா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு கைத்தொழிலாளர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு, 2026 ஜனவரி 28 ஆம் திகதி நடைபெற்றது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், வெள்ளத்தால் வர்த்தக இழப்புகளைச் சந்தித்த 63 சிறு கைத்தொழிலாளர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்களுக்கு தலா 200,000 ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கான மொத்தச் செலவு 12.6 மில்லியன் ரூபா ஆகும்.

இழப்பீடு வழங்கும் நிகழ்வு, கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்க மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ. சரத்சந்திர ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் கலாஞ்சலி டி. அருணசாந்த, வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் கஞ்சன குமார உட்பட குறித்த அதிகாரிகள் மற்றும் இழப்பீடு பெறும் தொழில்முயற்சியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
டித்வா சூறாவளிக்குப் பின்னர் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த சிறு அளவிலான வர்த்தகங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இந்த இழப்பீடு வழங்குதல் பெரும் நிவாரணமாக அமையும் என்று இங்கு தெரிவிக்கப்பட்டது.


