கல்விச் சீர்திருத்தம் ஒரு கட்சியின் தனிப்பட்ட விவகாரமல்ல, அது நாட்டின் எதிர்காலம் – சாந்த பண்டார
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கல்விச் சீர்திருத்தச் செயல்பாட்டில் காணப்படுகின்ற குறைபாடுகள் அனைத்தையும் உடனடியாக நிவர்த்தி செய்து, முறையான மற்றும் திட்டமிட்ட ரீதியில் அதனை விரைவாகச் செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கல்விச் சீர்திருத்தங்களை தாமதமின்றி நடைமுறைப்படுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் பொதுஜன கல்வி ஊழியர் சங்கம் ஆகியன தற்போதைய அரசாங்கத்திடமும் கல்வி அமைச்சிடமும் வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டார். இந்தச் சீர்திருத்தங்களை முன்னெடுக்க அரசாங்கத்திற்குச் சிறந்த சந்தர்ப்பம் கிடைத்த போதிலும், கல்வி அமைச்சினதும் அது சார்ந்த குழுக்களினதும் தவறு காரணமாக கல்விச் சீர்திருத்தங்கள் மேலும் ஒரு வருடம் பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளதாகச் சாட்டிய அவர், இதற்கான முழுப் பொறுப்பையும் கல்வி அமைச்சே ஏற்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
கல்வித்துறை சார்ந்த இத்தனை அறிஞர்கள் இருக்கும் ஒரு சபையினால் இக்குறைபாடுகளைக் கண்டறிய முடியாமல் போனது ஏன் என்ற கேள்வி எழுவதாகவும், கல்விச் சீர்திருத்தங்களை அரசாங்கம் திட்டமிட்டே தாமதப்படுத்துகிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், புதிய சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளைப் பாடசாலைகளில் உருவாக்க அரசாங்கம் தவறியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் இந்திய விஜயம் குறித்து எழுப்பப்படும் விமர்சனங்களுக்கும் அவர் பதிலளித்தார்.
இந்தியாவின் ஒடிசாவிலுள்ள KIIT பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில், குடியரசு தின விழாவில் உரையாற்றுவதற்காகவே அவர் அங்கு சென்றதாகத் தெரிவித்தார். எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் வெளிநாடுகளுக்குச் சென்று அரசாங்கத்தைப் பற்றியோ அல்லது நாட்டைப் பற்றியோ அவதூறு பரப்புவதைப் போலன்றி, நாமல் ராஜபக்ச ஒரு முதிர்ச்சியான இளம் தலைவராக நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் அங்கு உரையாற்றியதாக அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குக் கிடைத்த இந்த கௌரவத்தை எண்ணி மகிழ்ச்சியடைய வேண்டுமே தவிர, அரசியல் லாபத்திற்காக மடைமாற்ற முனையக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், தற்போது நடைபெற்று வரும் கூட்டுறவுத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், தேசிய மக்கள் சக்தி (திசைகாட்டி) பல இடங்களில் படுதோல்வியைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டார். கூட்டுறவுத் தேர்தல் முடிவுகள் என்பது கிராமப்புற மக்களின் அரசியல் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவே முன்னொரு காலத்தில் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை கிராம மட்டத்தில் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருவதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுவதாகத் தெரிவித்தார்.

