ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் வேலையற்ற பட்டதாரிகள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கொழும்பு காலி வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இன்றைய தினம் (27.01.2026) வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவியது.

தமக்கு முறையான வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன்வைத்து, “நாங்கள் சாவோமே தவிர இங்கிருந்து செல்ல மாட்டோம்” என்ற உறுதியான வாசகங்களுடன் பட்டதாரிகள் இந்த போராட்டத்தை ஆரம்பித்தனர்.
தற்போதைய அரசாங்கம் மனிதாபிமானமற்ற முறையில் பட்டதாரிகளை நடுத்தெருவில் தவிக்கவிட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் இதன்போது கடும் அதிருப்தியை வெளியிட்டனர். குறிப்பாக, படித்த பட்டதாரிகள் வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது கல்வி அமைச்சின் தோல்வியையே காட்டுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியதுடன், கடந்த அரசாங்கங்கள் ஓரளவாவது தீர்வினை வழங்கிய போதிலும் தற்போதைய ஜனாதிபதி இது குறித்து கவனம் செலுத்தவில்லை எனவும் சாடினர்.

போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர், அங்கிருந்த தற்காலிக பந்தல்களை அகற்றுமாறு அறிவுறுத்தியபோது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தாம் மிகவும் அமைதியான முறையில் அறவழிப் போராட்டத்தை முன்னெடுப்பதாகவும், தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் பட்டதாரிகள் உறுதியாகத் தெரிவித்தனர். இந்த உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றம் காரணமாக ஜனாதிபதி செயலகத்தை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததோடு, போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.


