அனுர அரசாங்கத்தின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள கிபுலு ஓயா திட்டம் சிங்கள குடியேற்றங்களை நிறுவும் செயன்முறை கொண்டது : நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

அனுர அரசாங்கத்தின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள கிபுலு ஓயா திட்டம் சிங்கள குடியேற்றங்களை நிறுவும் செயன்முறை கொண்டது என்று தமிழ்த் தேசிய பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்று (23.01.2026) நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் ஆற்றிய உரையில்-
நான் இந்த சந்தர்ப்பத்தில் வடக்கு கிழக்கு பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் ஏற்றுக்கொள்ளவோ சம்மதிக்க முடியாத ஒரு விடயத்தை பற்றி குறிப்பிட விரும்புகின்றேன்.
வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச சார்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட அவர்களது மனவிருப்பை வெளிப்படுத்தும் உரிமையை அவர்களுக்கு அவர்களது கட்சி வழங்குமாயின் இந்த திட்டத்தை அவர்களும் எதிர்க்கவே செய்வார்கள் என நம்புகின்றேன்.
அதுதான் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள கிபுலு ஓயா திட்டமாகும். இது ராஜபக்சேக்களால் தொடங்கப்பட்டது, ராஜபக்சேக்கள் யார் என்பதை பிரதமரும் அறிவார். அவர்களை, இலங்கை இதுவரை கண்டிராத மிகக் கடுமையான இனவெறியர்களாக தமிழர்களாகிய நாங்கள் கருதுகிறோம். போருக்குப் பின் 2013 ஆம் ஆண்டில், இந்த கிபுலு ஓயா திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 6,000 சிங்கள குடும்பங்களை குடியேற்றுவதற்கு திட்டமிடப்பட்டது. சுமார் 3,000 அல்லது 4,000 குடும்பங்கள் ஏற்கனவே அந்த பகுதிகளில் குடியேற்றப்பட்டிருந்தன. 1984 ஆம் ஆண்டு முல்லைத்தீவு கிழக்கு மற்றும் வவுனியா வடக்குப் பகுதிகளைச் சேர்ந்த – பல நூற்றாண்டுகளாக அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் திட்டமிட்ட இராணுவ நடவடிக்கைகள் காரணமாக விரட்டப்பட்டனர். அவர்கள் இடம்பெயர்ந்தனர்.
அவர்கள் மீளக்குடியவர்வதற்கு முன்னரே தனித்தனியான குடியேற்றத் திட்டங்கள் நடந்தன. இந்த விடயங்கள் நீண்டகாலமாக நாங்கள் அவ்வப்போது எழுப்பி வரும் பிரச்சனையாகவும் உள்ளது. போரின் முடிவில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தமது பூர்வீக இடங்களுக்கு திரும்பி செல்ல முடியாதவாறு, வனத்துறையினர் அவற்றையெல்லாம் காடுகள் என்று எல்லைப்படுத்தினர். அத்துடன் அந்த மாவட்டத்தைச் சேராதவர்களை கொண்டுவந்து இடங்களை ஆக்கிரமித்தனர். இப்போதும் இது ஒரு பெரிய பிரச்சனையாகவே உள்ளது, வடக்கு மாகாணத்திற்கு கொண்டுவரப்படும் இந்த கிபுலு ஓயா திட்டத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய தமிழ் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
இபோன்ற சிங்கள குடியேற்றங்களை நிறுவுவதே இந்த திட்டத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாகும். நடக்கவிருக்கும் குடியேற்றங்கள் அனைத்தும் சிங்கள குடியேற்றங்களாகும். இது போன்ற குடியேற்றங்களை மேற்கொள்வது உண்மையில் அரசியலமைப்பை மீறுவதாகும்.
நீங்கள் ராஜபக்சேக்களை இனவெறி கொண்டவர்கள் என்று அழைக்கிறீர்கள், ஆனால் நீங்களும் அதையேதான் செய்கிறீர்கள். இந்த திட்டத்தை செயல்படுத்த 7 பில்லியன் ரூபாய்களை ராஜபக்சே ஒதுக்கினார், மேலும் 2 பில்லியன்களால் நீங்கள் இந்தத் திட்டத்தை அதிகரித்துள்ளீர்கள்.
இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது அப்பட்டமான இனவெறி இல்லையா? இதன் மூலம் நீங்கள் எங்களுக்கு சொல்லவரும் செய்தி என்ன? நாங்கள் தனியார் நிலத்தில் கட்டப்பட்ட தையிட்டி விகாரை கட்டுமானத்தை எதிர்த்துப் போராடும்போது. அதனை ஜனாதிபதி இனவெறி என்று கூறுகிறார் . நான் ஜனாதிபதிக்கு சவால் விடுகிறேன். அது தனியார் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. தையிட்டி திஸ்ஸவிகாரைக்குரிய நிலம் ஏற்கனவே இருக்கும்போது, அங்கு அந்த விகாரை கட்டப்படவில்லை. மாறாக தனியாருக்கு சொந்தமான நிலத்தையே எடுத்துக்கொண்டனர். தனியாருக்கு சொந்தமான நிலங்கள் சட்டவிரோதமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும்போது, ஜனாதிபதி இனவெறி என்று கூறுகிறார். இதன்மூலம் நீங்கள் எங்களுக்குச் சொல்லும் செய்தி என்ன?
நாங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க முயற்சிக்கும்போது நீங்கள் எங்களை விரக்தியடையச் செய்கிறீர்கள். நீங்கள் நியாயமற்ற முறையில் குறிவைக்கப்படும் போது, நாங்கள் அதற்கு துணைபோகவில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.
நாங்கள் போராட்டம் நடத்தும் குடும்பங்களையும் அந்த மக்களையும் ஆதரிக்கிறோம்,
உங்களிடமும் எந்த மாற்றமும் இல்லை. இந்த அரசாங்கம் மற்ற அரசாங்கங்களிலிருந்து வேறுபட்டால், அரசாங்கம் வடக்கு கிழக்கு மக்களை நடத்தும் விதத்தில் ஒரு முறையான மாற்றம் இருக்க வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக்கொள்கிறேன். கடந்த காலங்களில் முந்தைய அரசாங்கங்கள் செய்த அதே காரியங்களை நீங்கள் செய்துகொண்டு அவர்கள் இனவெறி பிடித்தவர்கள் என்றும் நீங்கள் இனவெறி பிடித்தவர்கள் அல்ல என்றும் சொல்ல முடியாது.
எனவே நான் இந்த அரசாங்கத்திடமும், பிரதமரிடமும், இதில் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த திட்டம் நிறைவேறினால், உங்கள் அரசாங்கத்திடம் மக்கள் எதிர்பார்த்த இந்த கடைசி வாய்ப்பும் நழுவிவிடும்.

