இலங்கை மற்றும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (NUS) PhD மாணவர்களுக்கான கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பைத் தொடங்கின

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தால் (National University of Singapore – NUS) வழங்கப்படும் PhD வேட்பாளர்களுக்கான புலமைப்பரிசில் வலையமைப்பு நிகழ்வு (Scholarship Networking Event), கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி. மதுர சேனவிரத்ன அவர்களின் தலைமையில் கொழும்பில் உள்ள சங்ரி-லா ஹோட்டலில் ஒக்டோபர் 31 அன்று நடைபெற்றது.

இலங்கை மாணவர்களுக்கான வெளிநாட்டு உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதன் தேசிய முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், இந்த நிகழ்ச்சி NUS மற்றும் இலங்கை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டது.

கல்வி ஒத்துழைப்பு, கல்விப் பங்காளர் உறவுகள் மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளை வலுப்படுத்தும் இலக்கை அடைவதற்காக, 2025 மே மாதம் அமைச்சிற்கும் NUS-இற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding) கையெழுத்திடப்பட்டது. இதைத் தொடர்ந்து, கணினியியல், பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற பரந்த துறைகளில் இலங்கை விண்ணப்பதாரர்களுக்கு NUS-இல் முனைவர் பட்டப் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

NUS தற்போது QS உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் 8வது இடத்திலும், ஆசியாவில் 1வது இடத்திலும் உள்ளது. இன்றைய NUS வெளிக்கள நிகழ்வின் (Outreach event) நோக்கம், விண்ணப்பதாரர்கள் வலுவான, போட்டித்தன்மை வாய்ந்த விண்ணப்பங்களைத் தயாரிக்க உதவுவதும், எதிர்காலத்திற்காக இலங்கை, NUS மற்றும் சிங்கப்பூர் இடையேயான கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுமாகும்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி. மதுர சேனவிரத்ன அவர்கள், பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களின் கல்விச் சாதனைகள் மற்றும் இலங்கையின் ஆராய்ச்சிக் களத்திற்குப் பங்களிக்கும் ஆற்றலைப் பாராட்டினார். அவர்கள் NUS ஆசிரியர்களுடன் தீவிரமாக இணைந்து, புத்தாக்கம் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பின் மூலம் தேசிய முன்னுரிமைகளை நிவர்த்தி செய்யும் திட்டங்களை உருவாக்கி, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் அவர்களை ஊக்குவித்தார்.

NUS பிரதிநிதிகளுக்கு தனது பாராட்டைத் தெரிவித்த பிரதி அமைச்சர், NUS-இற்கும் இலங்கைக்கும் இடையிலான இந்தப் பங்காண்மை ஒரு கல்வி ஒத்துழைப்பு மட்டுமல்ல, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு பாலமாகும் என்றும் வலியுறுத்தினார். எதிர்வரும் ஆண்டுகளில் சிங்கப்பூருடனான கல்வி மற்றும் ஆராய்ச்சிக் க்களை மேலும் வலுப்படுத்துவதற்கான அமைச்சின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) தலைவர் பேராசிரியர் கபில சேனவிரத்ன அவர்களும், கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகளும், NUS பட்டதாரிப் பள்ளியின் (Graduate School) பிரதித் தலைவரும், ஒருங்கிணைந்த அறிவியல் மற்றும் பொறியியல் திட்டத்தின் (Integrative Sciences and Engineering Programme) இயக்குநருமான பேராசிரியர் வோங் லிம்சூனும் (Prof. WONG Limsoon), பட்டதாரி ஆய்வுகள் துணைத் தலைவரான பேராசிரியர் சான் முன் சூன் (Prof. CHAN Mun Choon) உட்பட NUS பேராசிரியர்களும், வருங்கால முனைவர் பட்டப் புலமைப்பரிசில் வேட்பாளர்களும், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கல்வியாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.