ஹாங்காங்கை வீழ்த்தி பாகிஸ்தான் – ‘சூப்பர் 4’ சுற்றுக்குள் நுழைந்தது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று லீக் சுற்றின் கடைசி ஆட்டம் நடைபெற்றது. இதில் குரூப் ‘ஏ’ பிரிவில் சார்ஜாவில் இன்று நடைபெற்ற 6-வது ஆட்டத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, நிஜாகத் கான் தலைமையிலான ஹாங்காங்கை எதிர்கொண்டது.
இதில் நாணயச் சுழற்சியில் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் அசாம் களமிறங்கினர். பாபர் அசம் 9 ஓட்டங்களில் வெளியேறினார்.
அடுத்து வந்த பகர் சமானுடன் ஜோடி சேர்ந்த ரிஸ்வான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 41 பந்துகளை சந்தித்த பகர் சமான் 53 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்துவந்த குருஷித் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 193 ஓட்டங்கள குவித்தது. ரிஸ்வான் 57 பந்துகளில் 78 ஓட்டங்கள் குவித்தார். அதிரடியாக ஆடிய குருஷித் 15 பந்துகளில் 5 சிக்சர்கள் உள்பட 35 ஓட்டங்கள் குவித்தார்.
இதனை தொடர்ந்து 194 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் கேப்டன் நிஸாகத் கான் 8 ஓட்டங்கலும், யாசிம் 2 ஓடங்களுடனும் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். அடுத்துவந்த ஹாங்காங் வீரர்கள் அனைவரும் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
இறுதியில் 10.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஹாங்காங் 38 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் ஹாங்காங்கை 155 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் இமாலய வெற்றிபெற்றது. பாகிஸ்தான் அணியின் ஷதாப் கான் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், முகமது நவாஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது. ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று நாளை தொடங்குகிறது. முதல் போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.