அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் வெற்றி.
‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் 2-வது நாளில் ஆண்கள் ஒற்றைர் பிரிவில் 4 முறை சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்) 4-6, 6-2, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகட்டாவை வீழ்த்தினார்.
காயத்தில் இருந்து மீண்டு வந்த பிறகு கொஞ்சம் தடுமாற்றத்துடனே விளையாடிய நடால் இந்த வெற்றிக்காக 3 மணி 8 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது. அவர் 2-வது சுற்றில் இத்தாலியின் பாபியோ போக்னினியை எதிர்கொள்கிறார். அர்ஜென்டினாவின் செபாஸ்டியன் பேசுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்பெயினின் ‘இளம் புயல்’ கார்லஸ் அல்காரஸ் 7-5, 7-5, 2-0 என்ற செட் கணக்கில் முன்னிலையில் இருந்த போது செபாஸ்டியன் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். இதனால் அல்காரஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஸ்வாட்ஸ்மேன் (அர்ஜென்டினா), ஜான் இஸ்னர் (அமெரிக்கா), ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), ஹர்காக்ஸ் (போலந்து), கேமரூன் நோரி (இங்கிலாந்து), மரின் சிலிச், போர்னா கோரிச் (குரோஷியா) உள்ளிட்ட முன்னணி வீரர்களும் வெற்றிகரமாக 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.