T20-பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி!
இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியும், கனடா அணியும் மோதியது.
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி கனடா அணியை எதிர்த்து நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் நாணய சுழற்சயில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய கனடா அணி, வழக்கம் போலவே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிவை கண்டது. ஒரு முனையில் கனடா அணியின் தொடக்க வீரரான ஆரோன் ஜான்சன் மட்டும் நிலைத்து நின்று 44 பந்துக்கு 52 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
இவரை தாண்டி கனடா அணியில் ஒரு வீரரும் பொறுப்புடன் விளையாடததன் காரணமாக 20 ஓவர்களில் கனடா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 106 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முகமது அமீரும், ஹரிஸ் ரஃபும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தனர்.
அதனை தொடர்ந்து எளிய இலக்கான 107 ஓட்டங்களை எடுக்க பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அதன்படி தொடக்கவீரரான சைம் அயூப் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அவரை தொடர்ந்து 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பாபர் அசாமும், முகமது ரிஸ்வானும் சிறப்பாக விளையாடி அணியை கரை சேர்த்தனர்.
அதில் பாபர் அசாம் 33 பந்துக்கு 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் முகமது ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 53 பந்துக்கு 53* ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றிபெற செய்தார். இதனால் பாகிஸ்தான் அணி 17.3 ஓவர்களில் இலக்கான 107 ஓட்டங்கள் கடந்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியை வெற்றி பெற்றதுடன், இந்த டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் வெற்றியையும் பதிவு செய்துள்ளது.