ஐபிஎல் 2024- 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி.
டெல்லி அணி 18.1 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 170 ஓட்டங்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் நாணய சுழற்சயில் வென்ற லக்னோ முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி லக்னோ 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 167 ஓட்டங்கள் எடுத்தனர். டெல்லி அணியில் அதிகபட்சமாக குல்தீப் 3 விக்கெட்டையும், கலீல் அகமது 2 விக்கெட்டையும் பறித்தனர்.
லக்னோ அணியில் கே.எல் ராகுல் 39 ஓட்டங்களும் , ஆயுஷ் படோனி 55* ஓட்டங்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். 168 ஓட்டங்கள் இலக்குடன் டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, டேவிட் வார்னர் இருவரும் களமிறங்கினர். டேவிட் வார்னர் 4-வது ஓவரில் 8 ஓட்டங்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்து ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் களமிறங்கினார். மறுபுறம் நிதானமாக விளையாடி வந்த பிருத்வி ஷா 32 ஓட்டங்கள் எடுத்து நடையை கட்டினார். பிறகு கேப்டன் ரிஷப் பந்த் , மெக்குர்க் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி அணியின் ஓட்டங்களை சேர்த்தனர்.
இதில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த மெக்குர்க் 55 ஓட்டங்கள் எடுத்தபோது விக்கெட்டை இழந்தார். இருப்பினும் கேப்டன் ரிஷப் பந்த் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 41 ஓட்டங்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இறுதியாக டெல்லி அணி 18.1 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 170 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லக்னோ அணியில் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டையும், யாஷ் தாக்கூர், நவீன்-உல்-ஹக் தலா 1 விக்கெட்டையும் பறித்தனர். டெல்லி அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் வெற்றியும், 4 போட்டியில் தோல்வி தழுவியுள்ளது. அதே நேரத்தில் லக்னோ அணி இதுவரை 5 போட்டிகள் விளையாடி 3 போட்டியில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது.