5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி..!
உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று 42 வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும் , ஆப்கானிஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் மோதியது. நாணய சுழற்சயில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது . தொடக்க வீரர்களாக இப்ராஹிம் சத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ் களமிறங்கினர். குர்பாஸ் சிறப்பாக விளையாட தொடங்கினர். இருப்பினும் 25 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார். இவர்கள் பார்ட்னர்ஷிப் மூலம் 41 ஓட்டங்கள் எடுத்து ஒரு தொடக்கத்தை கொடுத்தனர்.
முந்தைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்த இப்ராஹிம் சத்ரான் இந்த போட்டியில் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 15 ஓட்டங்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 2 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் ஆனார். பின்னர் வந்த ரஹ்மத் ஷா நிதானமாக விளையாட, அஸ்மத்துல்லா உமர்சாய் அதிரடி காட்டினார். ரஹ்மத் ஷா 26 ஓட்டங்களில் வெளியேற அடுத்து வந்த இக்ராம் அலிகில், முகமது நபி, ரஷீத் கான் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய அஸ்மத்துல்லா உமர்சாய் 90 ஓட்டங்களை தாண்டினார்.
இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ஓட்டங்கள் எடுத்தது. உமர்சாய் ஆட்டமிழக்காமல் சதத்தை தவறவிட்டு 97 ஓட்டங்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். தென்னாப்பிரிக்கா அணியில் ஜெரால்ட் கோட்ஸி 4 விக்கெட்டுகளையும், லுங்கி நிகிடி , கேசவ் மகாராஜ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். 255 ஓட்ட இலக்குடன் தொடக்க வீரராகவின்டன் குயின்டன் டி காக், டெம்பா பவுமா இருவரும் களமிறங்கினர். இவர்கள் இருவரும் நிதானமாக விளையாடி அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
இதில் நிதானமாக விளையாடி வந்த டெம்பா பவுமா 23 ஓட்டங்கள் எடுத்து விக்கெட்டை இழக்க, மறுபுறம் விளையாடி வந்த குவிண்டன் டி காக் அரைசதத்தை தவறி விட்டு 41 ஓட்டங்களில் விக்கெட் பறிகொடுத்தார். பின்னர் களமிறங்கிய ஐடன் மார்க்ரம் 25, ஹென்ரிச் கிளாசென் 10 ஓட்டங்களில் விக்கெட்டை கொடுத்து பெவிலியன் திரும்பினர். மத்தியில் களம் இறங்கி டேவிட் மில்லர் வந்த வேகத்தில் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி என மொத்தம் 24 ஓட்டங்கள் எடுத்து முகமது நபி ஓவரில் அவரிடமே பிடி கொடுத்து வெளியேறினார்.
3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ராஸ்ஸி வான் டெர் டுசென் நிதானமாக விளையாடி அரைசதம் பூர்த்தி செய்து 95 பந்தில் 6 பவுண்டரி , 1 சிக்ஸர் என மொத்தம் 76* ஓட்டங்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 47.3 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 247 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும் போட்டி முடிவதற்கு முன்பே ஆப்கானிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.