உலகக்கோப்பை: இலங்கையை எளிதில் வீழ்த்தி நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி .
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 41-வது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் பெங்களூரில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் நாணய சுழற்சயில் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பத்தும் நிஸ்ஸங்க, குஷால் பெரேரா இருவரும் களமிறங்கினர்.
ஆட்டம் தொடங்கிய 2-வது ஓவரின் கடைசி பந்தில் நிஸ்ஸங்க 2 ஓட்டங்களிலேயே தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் 6, சதீர சமரவிக்ரம 1 மற்றும் சரித் அசலங்கா 8 ஓட்டங்கள் எடுத்து மூவரும் ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் மறுபுறம் விளையாடிய குசல் பெரேரா பொறுமையாக விளையாடி அரைசதம் அடித்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை சற்று உயர்த்தினர்.
அரைசதம் அடித்த சில நிமிடங்களிலேயே பிடி கொடுத்து பெவிலியன் திரும்பினார். இதனால் 11 ஓவரிலே இலங்கை 5 விக்கெட்களை இழந்தது. பின்னர் வந்த தனஞ்சய டி சில்வா 19, ஏஞ்சலோ மேத்யூஸ் 16 ஓட்டங்களிலும் அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சாமிக்க கருணாரத்ன 6, துஷ்மந்த சமீர 1 ஓட்டம் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். கடைசியில் இறங்கிய மகேஷ் தீக்ஷனா நிதானமாக விளையாடி 38 ஓட்டங்கள் எடுத்தார்.
இறுதியாக இலங்கை அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளும், லாக்கி பெர்குசன், ரச்சின் ரவீந்திரன் மற்றும் மிட்செல் சான்ட்னர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 172 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டேவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா இருவரும் களமிறங்கினர்.
ஆட்டம் தொடங்கியது முதல் கான்வே, ரச்சின் ரவீந்திரா இருவரும் நிதானமாக விளையாடி அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருப்பினும் இருவரும் அரைசத்தை தவற விட்டு கான்வே 45 ஓட்டங்களிலும் , ரச்சின் ரவீந்திரா 42 ஓட்டங்களிலும் பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த கேப்டன் வில்லியம்சன் வந்த வேகத்தில் 2 பவுண்டரி விளாசி 14 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் இறங்கிய மார்க் சாப்மேன் 7 ஓட்டங்களில் ரன் அவுட் ஆனார். இருப்பினும் அடுத்து வந்த டேரில் மிட்செல் சிறப்பாக விளையாடி 43 ஓட்டங்கள் அடித்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். இறுதியாக நியூசிலாந்து அணி 23.2 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 172 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ் 2 விக்கெட்டையும், மஹேஷ் தீக்ஷனா, துஷ்மந்த சமீர தலா 1 விக்கெட்டை பறித்தனர்.