பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்றைய 31-வது லீப் போட்டியில் பாகிஸ்தான் அணியும், பங்களாதேஷ் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் நாணய சுழற்சயில் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்களாக தன்சித் ஹசன், லிட்டன் தாஸ் இருவரும் களமிறங்கினர். முதல் ஓவரின் 5 -வது பந்தில் ஓட்டங்கள் எடுக்காமல் தன்சித் ஹசன் டக் அவுட் ஆனார். அடுத்த களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் 4, ஓட்டங்களுடனும் முஷ்பிகுர் ரஹீம் 5 ஓட்டங்களுடனும் வந்த வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இதனால் பங்களாதேஷ் அணி 23 ஓட்டங்களில் 3 விக்கெட்டை பறிகொடுத்தது. பின்னர் வந்த மஹ்முதுல்லாஹ் , லிட்டன் தாஸ் உடன் சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டு கொண்டு வந்தனர். நிதானமாக விளையாடி வந்த லிட்டன் தாஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 46 ஓட்டங்களில் இப்திகார் அகமது ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இருப்பினும் மறுபுறம் விளையாடி வந்த மஹ்முதுல்லாஹ் அரைசதம் அடித்த சில நிமிடங்களில் 56 ஓட்டங்கள் எடுத்து ஷஹீன் அப்ரிடி பந்தில் போல்ட் ஆனார். பின்னர் மத்தியில் இறங்கிய கேப்டன் ஷாகிப் அல் ஹசன் சிறப்பாக விளையாடி அணிக்கு 43 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்

அடுத்து வந்த வீரர்கள் பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். கடைசியில் இறங்கிய மெஹிதி ஹசன் 25 ஓட்டங்கள் எடுக்க இறுதியாக பங்களாதேஷ் அணி 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணியில் ஷஹீன் அப்ரிடி, முகமது வாசிம் தலா 3 விக்கெட்டையும், ஹரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 205 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக் , ஃபகார் ஜமான் இருவரும் களமிறங்கினர்.

ஆட்டம் தொடங்கியது முதல் இருவரும் அதிரடியாக விளையாடி வந்தனர். இவர்களின் விக்கெட்டை பறிக்க முடியாமல் பங்களாதேஷ் அணி திணறி வந்தது. இருப்பினும் சிறப்பாக விளையாடிய அப்துல்லா ஷபீக் , ஃபகார் ஜமான் இருவரும் அரைசதம் விளாசினார். நிதானமாக விளையாடி வந்த அப்துல்லா ஷபீக் 68 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார். இவர்களின் கூட்டணியில் 128 ஓட்டங்கள் சேர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கேப்டன் பாபர் அசாம் களமிறங்கிய வேகத்தில் 9 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். மறுபுறம் அதிரடியாக விளையாடி வந்த ஃபகார் ஜமான் 74 பந்தில் 7 சிக்ஸர், 3 பவுண்டரி என மொத்தம் 81 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார்.

பின்னர் களம் கண்ட முகமது ரிஸ்வான், இப்திகார் அகமது நிதானமாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். இறுதியாக பாகிஸ்தான் அணி 32.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 205 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசிவரை களத்தில் முகமது ரிஸ்வான் 26* ஓட்டங்களுடன் , இப்திகார் அகமது 17* ஓட்டங்களுடனும் இருந்தனர். பங்களாதேஷ் அணியில் மெஹிதி ஹசன் மிராஸ் 3 விக்கெட்டை வீழ்த்தினார்.