உலகக் கோப்பை கிரிக்கெட்: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி.
இலங்கை தொடர் தோல்வி.
ஆஸ்திரேலியா அணி 35.2 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 215 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகக்கோப்பை தொடரில் இன்று 14-வது லீக் போட்டி லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியும், இலங்கை அணியும் மோதியது. இந்த போட்டியில் நாணய சுழற்சயில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது . இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது முதல் அதிரடியாக விளையாடி ஓட்டங்களை குவித்தனர். இவர்கள் விக்கெட்டை பிரிக்க முடியாமல் ஆஸ்ரேலியா திணறியது.
சிறப்பாக விளையாடிய பதும் நிஸ்ஸங்க 67 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்தபோது கம்மின்ஸ் வீசிய பந்தை வார்னரிடம் பிடி கொடுத்து விக்கெட்டை இழந்தார். இவர்கள் கூட்டணியில் 125 ஓட்டங்கள் சேர்க்கப்பட்டது. அடுத்த சில ஓவரில் குசல் பெரேரா 82 பந்துகளில் 78 ஓட்டங்கள் விளாசி பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ஓட்டங்கள் எடுத்தனர். அதன்படி குசல் மெண்டிஸ் 9 ஓட்டங்களும் , சதீர சமரவிக்ரம 8, சரித் அசலங்க 23, தனஞ்சய டி சில்வா 7 ஓட்டங்களும் எடுத்து விக்கெட்டை இழந்தனர்.
இறுதியாக இலங்கை அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழந்து 209 ஓட்டங்கள் எடுத்தனர். ஆஸ்ரேலியா அணியில் ஆடம் ஷாம்பா 4 விக்கெட்களையும், கம்மின்ஸ் , மிட்செல் ஸ்டார்க் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா அணி 210 வெற்றி என்ற இலக்குடன் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், மிட்சல் மார்ஷ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே டேவிட் வார்னர் 11 ஓட்டங்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் நிலைத்து நிற்காமல் வந்த வேகத்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகி இருவரின் விக்கெட்களை இலங்கை வீரர் தில்ஷன் மதுஷங்கா வீழ்த்தினார். தொடக்க வீரராக களமிறங்கிய மிட்சல் மார்ஷ் நிதானமாக விளையாடி அரைசதம் விளாசினார். அரைசதம் அடித்த சிறிது நேரத்திலே ரன் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மார்னஸ் லாபுசாக்னே மற்றும் ஜோஷ் இங்கிளிஸ் இருவரும் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர். இருப்பினும் மார்னஸ் லாபுசாக்னே அரைசதம் அடிக்க நெருங்கிய போது தில்ஷன் மதுஷங்கா ஓவரில் 40 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .
மறுபுறம் விளையாடி வந்த ஜோஷ் இங்கிளிஸ் பொறுமையாக விளையாடி அரைசதம் 59 பந்தில் 58 ஓட்டங்கள் சேர்த்தார். அதில் 5 பவுண்டரி , 1 சிக்ஸர் அடங்கும். கடைசியாக இறங்கிய மேக்ஸ்வெல் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். இறுதியாக ஆஸ்திரேலியா அணி 35.2 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 215 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் 31* ஓட்டங்களும் , மார்கஸ் ஸ்டோனிஸ் 20* ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தனர்.
ஆஸ்திரேலியா அணி நடப்பு உலகக்கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்து தனது வெற்றி கணக்கை தொடங்கியது. இலங்கை அணி விளையாடிய 3 போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது. ஆஸ்திரேலியா அணி விளையாடிய 3 போட்டிகளில் 1 போட்டியில் வெற்றியும், 2 போட்டியில் தோல்வியும் தழுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.