ரக்பி உலகக் கிண்ண ஆட்டம் பாரிஸில் ஆரவாரமாக ஆரம்பம்

மைதானத்தில் அணிகளை மக்ரோன் நேரில் வரவேற்பு

Kumarathasan Karthigesu-பாரிஸ்

உலகக் கிண்ண உதைபந்தாட்டத்துக்கு நிகரான ரக்பி உலகக் கிண்ணப் போட்டிகள் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களது மகிழ்ச்சி ஆரவாரத்துக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ளன. பாரிஸ் புறநகரில் அமைந்துள்ள தேசிய உதைபந்தாடட மைதானத்தில் (Stade de France) நேற்றிரவு நடைபெற்ற கண்கவர் தொடக்க விழாவில் நாட்டின் அதிபர் மக்ரோன் நேரில் கலந்து கொண்டு ரக்பி வீரர்களை வரவேற்று உரையாற்றினார். “இந்த ரக்பி உலகக் கிண்ண அணிகள் அனைத்தையும் எங்கள் மண்ணுக்கு வரவேற்பதில் மகத்தான பெருமை அடைகின்றோம்”என்று அவர் அங்கு தெரிவித்தார்.

வாண வேடிக்கைகளுடன் ஆரம்பித்த கண்கவர் தொடக்க விழாவில் புகழ்பெற்ற திரை மற்றும் நாடகக் கலைஞர்கள் பங்குபற்றிய அரங்க நிகழ்வு ஒன்றும் இடம்பெற்றது. ஆரம்ப விழாவுக்காக ஸ்ரட் து பிரான்ஸ் (Stade de France) அரங்கில் ஈபிள் கோபுரத்தின்பிரமாண்டமான மாதிரி உருவம் ஒன்றும் நிறுவப்பட்டிருந்தது . பாரிஸில் நிலவுகின்ற கடும் வெப்பத்துக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அரங்கை நிறைத்திருந்தனர்.

மிகுந்த பரபரப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்தின் புகழ்பெற்ற “ஓல் பிளக்ஸ்” (All Blacks) அணியும் பிரான்ஸின் ப்ளூ (Les Bleus) அணியும் மோதின. கடுமையான பிரயத்தனங்களுடன் பிரான்ஸ் அணி  அதில் வெற்றியீட்டியது (27-13). இந்த முதல் நாள் வெற்றி பிரெஞ்சு ரசிகர்கள்மத்தியில் இறுதி வெற்றிவாய்ப்பு மீது தீவிர எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

உலக அணிகள் பங்குபற்றவுள்ள ஆட்டங்கள் தொடர்ந்து ஒக்ரோபர் 28 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளன. உலகக் கிண்ணத்துக்கான இறுதி ஆட்டம் அன்று இரவு ஒன்பது மணிக்குத் தொடங்கும். உள்ளூர் ரசிகர்களுடன் உலகெங்கும் இருந்து சுமார் ஆறு லட்சம் ரசிகர்கள் இந்த ஆட்டங்களை ரசிப்பதற்காகப் பாரிஸ் நகருக்கு வருவர் என்று மதிப்பிடப்படுகிறது.

நுழைவுச் சீட்டுப் பெற்று நேரில் ஆட்டங்களைக் காண முடியாத நிலையில் உள்ளவர்களுக்காக பாரிஸ் நகரில் பல இடங்களில் பிரமாண்டமான திரைகளுடன் கூடிய ரசிகர் வலயங்கள் (fan zones) நிறுவப்பட்டுள்ளன.

பாரிஸ் நகரில் ரக்பி கிண்ணப் போட்டிகள் நடைபெறுகின்ற காலப்பகுதி முழுவதும் பலத்த – விரிவான-பாதுகாப்பு ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு கோடையில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் போது செய்யப்படவுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் இந்த ரக்பிப் போட்டிக்காலத்தின்போது பரீட்சித்துப்பார்க்கவுள்ளனர்.

ரக்பி அணிகளின் இந்த உலக ஆட்டம் 1987 முதல் நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெற்று வருகிறது. 1987 இல் நடந்த முதலாவது போட்டியில் நியூஸிலாந்து அணி ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்துக் கிண்ணத்தை வென்றிருந்தது.

பிரான்ஸ் அணி மூன்று தடவைகள் (1987- 1999 -2011) இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தது. கடைசியாக உலகக் கிண்ணப் போட்டிகள் 2019 இல் ஜப்பானில் நடைபெற்றன.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">