இன்னும் 1, 000 நாட்களுக்குள் போருக்குத் தயாராகுங்கள்: பிரித்தானிய அரசுக்கு பிரபுக்கள் சபை விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

Meiveli Media Team


அடுத்த 1, 000 நாட்களுக்குள் இராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் வகையில் பிரித்தானியா தயாராக இருக்க வேண்டும் என அந்நாட்டின் பிரபுக்கள் சபையின் நாடாளுமன்றக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானியாவின் பாதுகாப்புத் தயார்நிலை தொடர்பான விசேட அறிக்கையொன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிரபுக்கள் சபையின் கைத்தொழில் மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்களுக்கான குழுவினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், நாட்டின் பாதுகாப்புத் திறன்களை விரைவாக வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, இராணுவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை விரைவாக உற்பத்தி செய்வதுடன், ஆயுதங்கள் மற்றும் இராணுவத் தளவாடங்களைக் கொள்வனவு செய்வதிலுள்ள தேவையற்ற நிர்வாக நடைமுறைகளையும் குறைக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு அமைச்சுக்கும் தனியார் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்றும், ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட நவீன பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை உருவாக்கும் திறனை மேம்படுத்த வேண்டும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து உருவாகிவரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் அவசியமானவை எனக் குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, பிரித்தானியாவின் பாதுகாப்புத் தயார்நிலையை வலுப்படுத்துவதற்காக சுமார் 300 பில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்யப்படுவதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.