தனமல்வில பகுதியில் த்ரீவீலரும் டிப்பர் லொரியும் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு; மற்றொருவர் பலத்த காயம்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

வெள்ளவாய – தனமல்வில பிரதான வீதியின், குடா ஓயா வித்தியாலயத்திற்கு முன்பாக த்ரீவீலர் ஒன்றும் டிப்பர் லொரி ஒன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற வீதி விபத்தில் த்ரீவீலரில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த நபர் பிரதேசவாசிகளினதும் பொலிஸாரினதும் உதவியுடன் உடனடியாக தனமல்வில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
த்ரீவீலரில் பயணித்த இருவரும் ஹதபானாகல, புபுதுவெவ பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
உயிரிழந்தவர் 38 வயதுடையவர் எனவும், பலத்த காயமடைந்துள்ள த்ரீவீலரின் சாரதி 45 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வெள்ளவாய பகுதியில் இருந்து மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொரியின் சாரதியான அம்பாறை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை குடா ஓயா பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

