அரசாங்கம் ஜனநாயக உரிமைகளை மீறி சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்கிறது: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சாடல்!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ மற்றும் ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல் சட்டம்’ ஆகிய இரண்டும் ஒட்டுமொத்த நாட்டையும் ஒரு கட்சிக்கு அடிபணியச் செய்து, 220 இலட்சம் மக்களின் அடிப்படை மற்றும் மனித உரிமைகளை மீறும் வெட்கக்கேடான நடவடிக்கைகள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் இந்த ஒடுக்குமுறைச் சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (30) இடம்பெற்ற தொழிற்சங்கங்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கம்போடியாவின் போல் பொட் ஆட்சியை நமது நாட்டிலும் முன்னெடுப்பதற்காகவே இந்தச் சட்டமூலங்கள் கொண்டுவரப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் இந்த முயற்சியை ஜனநாயக வழிகளிலும் மக்கள் பலத்தைக் கொண்டும் தோற்கடிப்போம் என்றும் வலியுறுத்தினார்.

சட்டப் புத்தகங்களில் உள்வாங்கப்படும் இத்தகைய சட்டங்கள் மூலம் நாட்டில் சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தவே ஆட்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.

இதற்கு முன்னர் தடியடி, கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் துப்பாக்கிச் சூடு ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளை, இன்று சட்டங்கள் ஊடாக மக்களின் அடிப்படை உரிமைகளை மீறி முன்னெடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும், இந்தச் சட்டங்கள் நீதிமன்றங்களைக்கூட அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளன என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
நீதிமன்றத்திற்குரிய அதிகாரத்தைப் பறித்து நிறைவேற்று அதிகாரத்திடம் ஒப்படைப்பதன் மூலம், பயங்கரவாதி யார் என்பதை வரையறுக்கும் உரிமை நிறைவேற்று அதிகாரத்திற்கே கிடைக்கிறது.

இதன் மூலம் மாற்றுக்கருத்துடைய தரப்பினரைப் பயங்கரவாதிகளாக்கும் அபாயம் உருவாகியுள்ளது. தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு, சர்வதேச தரத்திலான ஜனநாயக ஏற்பாடுகளுக்கு இணக்கமான சட்டமே கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்திருந்த போதிலும், தற்போது கொண்டுவரப்படும் சட்டங்கள் தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் மிகப் பாரதூரமான அடக்குமுறையைக் கொண்டவையாக உள்ளன.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியமானது என்ற போதிலும், அதைக் காரணம் காட்டி 220 இலட்சம் மக்களின் மனித மற்றும் அடிப்படை உரிமைகளை மீறுவது மக்கள் ஆணைக்கு விரோதமான செயலாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இன்று சாதாரண மக்களுக்கு அதனை வழங்காமல், அரசாங்கத்தில் உள்ள 159 பேருக்கு மட்டுமே அந்த அழகான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் அடிப்படை மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் எடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் எடுப்போம் என சஜித் பிரேமதாச மேலும் உறுதியளித்தார்.