பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூ. 454 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்களுடன் இந்திய பொறியியலாளர் கைது!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் (NCU) அதிகாரிகளால் நேற்று (28) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சுமார் 454 மில்லியன் ரூபா சந்தைப் பெறுமதி கொண்ட கொக்கெய்ன் மற்றும் எக்ஸ்டசி (Ecstasy) போதைப்பொருட்களுடன் 46 வயதுடைய இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொழிலில் ஒரு பொறியியலாளரான குறித்த பயணி, கட்டார் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான QR 654 ரக விமானத்தில் பாரிஸிலிருந்து தோஹா வழியாக இலங்கையை வந்தடைந்துள்ளார்.
விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக பரிசோதனைக்காக இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் இவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
குறித்த பயணியின் பயணப் பொதிகளைச் சோதனையிட்ட போது சந்தேகத்திற்குரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், தீவிர பரிசோதனையின் பின்னர் அவை கொக்கெய்ன் மற்றும் எக்ஸ்டசி வகை போதைப்பொருட்கள் என்பது உறுதிசெய்யப்பட்டது.
இதன்போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதியில் 256 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்ட 5,121 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளும், 198 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்ட 13,173 கிராம் எக்ஸ்டசி போதைப்பொருளும் அடங்குகின்றன.
இதில் கண்டெடுக்கப்பட்ட எக்ஸ்டசி போதைப்பொருளானது சுமார் 23,000 மாத்திரைகளுக்குச் சமமானதாகும்.
இதற்கமைய கைப்பற்றப்பட்ட மொத்த போதைப்பொருள் தொகுதியின் மதிப்பிடப்பட்ட சந்தைப் பெறுமதி 454 மில்லியன் ரூபாவாகும் (ரூ. 454,000,000).
இச்சம்பவம் தொடர்பில் இலங்கை சுங்கப் பிரிவினர் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதி மற்றும் ஏனைய சான்றுப் பொருட்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் (PNB) ஒப்படைக்கப்படவுள்ளன.


