கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ரம்பொடகல்ல மீன் இனப்பெருக்கம் மற்றும் பயிற்சி நிலையத்திற்கு விசேட விஜயம்…

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

நாட்டின் நன்னீர் மீன்பிடித் தொழிற்துறை மற்றும் அலங்கார மீன் வளர்ப்பை மேம்படுத்தும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்று (28) விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

தேசிய நீர்வாழ் உயிரின அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் இயங்கும் ரம்பொடகல்ல மீன் இனப்பெருக்கம் மற்றும் பயிற்சி நிலையமே அமைச்சரின் இந்த விஜயத்தின் போது அவதானிப்பிற்கு உட்படுத்தப்பட்டது.

இந்த விஜயத்தின் போது, குறித்த நிலையத்தின் தற்போதைய நிலைமை குறித்து அமைச்சர் விரிவாகக் கண்டறிந்ததுடன், அங்கு நாளாந்தம் இடம்பெறும் மீன் இனப்பெருக்கம் மற்றும் பயிற்சிச் செயற்பாடுகளின் முன்னேற்றத்தையும் பார்வையிட்டார்.

நிலையத்தின் எதிர்கால நடவடிக்கைகளை மேலும் திறம்பட முன்னெடுக்கும் நோக்கில், அங்கு பணிபுரியும் பணியாளர்களுடன் அமைச்சர் நட்புறவு ரீதியான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இதன்போது பணியாளர்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் ஏனைய சவால்களை நேரடியாக அமைச்சரிடம் முன்வைக்க சந்தர்ப்பம் கிட்டியது.

இதற்கு மேலதிகமாக, நன்னீர் மீன்பிடித் தொழிற்துறையின் எதிர்காலத்திற்காக குறித்த நிலையத்தில் பயிற்சி பெற்றுவருவோரை சந்தித்த அமைச்சர், அவர்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளையும் கேட்டறிந்தார்.

இந்த விஜயத்தின் மூலம் ரம்பொடகல்ல மீன் இனப்பெருக்கம் மற்றும் பயிற்சி நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், அதன் திறனை அதிகரிப்பதற்குமான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.