பிரித்தானியாவில் 3 நாட்களுக்குத் தேவையான உணவு, குடிநீரைச் சேமிக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தல்

Meiveli Media Team


பிரித்தானியா – அவசரநிலைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளும் வகையில், குறைந்தது 72 மணிநேரத்துக்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வீடுகளில் தயாராக வைத்திருக்குமாறு பிரித்தானிய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. ‘டீந சுநயனல’ எனப்படும் விழிப்புணர்வு நடவடிக்கையின் ஊடாக,  கடுமையான வானிலை,  வெள்ளப்பெருக்கு,  காட்டுத்தீ மற்றும் இணையவழித் தாக்குதல்கள் போன்ற அவசரநிலைகளின்போது அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளை எதிர்கொள்ளப் பொதுமக்களைத் தயார்படுத்துவதே நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு குடும்பமும் மூன்று நாட்களுக்குத் தேவையான குடிநீர், நீண்டகாலம் கெடாமல் இருக்கக்கூடிய உணவுப் பொருட்கள், முதலுதவிப் பெட்டி, மின்கலத்தில் இயங்கும் டோர்ச், பவர் பேங்க், போர்வைகள் மற்றும் தேவையான மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைத் தயாராக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்சாரம்,  குடிநீர்,  தொலைத்தொடர்பு மற்றும் இணையச் சேவைகள் தற்காலிகமாகத் தடைப்படும் சந்தர்ப்பங்களில், அவசர உதவிகள் கிடைக்கும் வரை மக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள இந்தத் தயார்நிலை உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை,  பொதுமக்கள் அனைத்துப் பொருட்களையும் ஒரே நேரத்தில் வாங்க வேண்டிய அவசியமில்லை என்றும்,  வழக்கமான கொள்வனவுகளின்போது படிப்படியாக அவற்றைச் சேகரித்து வைத்துக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும்,இந்த அறிவுறுத்தல் பிரித்தானியாவில் உடனடியாக உணவு அல்லது குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படப்போகிறது என்பதற்கான எச்சரிக்கை அல்ல. எதிர்பாராத அவசரநிலைகளை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இது முன்வைக்கப்பட்டுள்ளது.