வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ புயல் – இலங்கைக்கு நேரடி பாதிப்பு இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ புயல் காரணமாக இலங்கைக்கு நேரடி பாதிப்பு இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வங்காள விரிகுடா கடற்பரப்பு மற்றும் அதனை அண்டிய நடு கடற்பரப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவிய ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை, தற்போது ‘அர்னாப்’ எனும் பெயரிடப்பட்ட புயலாக வலுப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெனரல் அஜித் விஜயம தெரிவித்துள்ளார்.
இப்புயல், இன்று (அக்டோபர் 26) அதிகாலை நிலவரப்படி, வங்காள விரிகுடாவின் நடுக்கடற்பரப்பு மற்றும் அதனை அண்டிய நடுக்கடற்பரப்பு பகுதிகளில், குறிப்பாக இந்தியாவின் அந்தமான் தீவிற்கருகில் உள்ள ஸ்ரீ ஜெயபுரத்திற்கு கிழக்கே சுமார் 590 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது.
இப்புயல் மேலும் வலுவடைந்து, இன்று இரவு மற்றும் நாளைய தினங்களில் அதிதீவிர புயலாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இது இலங்கைக்கு நேரடி தாக்கத்தை அல்லது நேரடி பலத்த பாதிப்பை ஏற்படுத்தாது என திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
நேரடி பாதிப்பு இல்லாவிட்டாலும், இப்புயலின் வக்ர சுழற்சி தாக்கத்தால் நாட்டில் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, வடமத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுவதுடன், சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை மிதமானதிலிருந்து தடித்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் புத்தளம், மன்னார் மற்றும் காங்கேசன்துறை தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கலாம்.
இதன் காரணமாக மேல், நடுகடற்பரப்பு மற்றும் பட்டகம கடற்பரப்புகளுக்கு குறிப்பாக வங்காள விரிகுடாவின் ஆழமான மற்றும் நடுகடல் பகுதிகளுக்கு அடுத்த சில நாட்களுக்கு அதாவது அக்டோபர் 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்குமாறு மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இப்பகுதிகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும், அலைகள் தீவிரமாகவும் காணப்படும் என்பதால் மீனவ மற்றும் கடற்படை செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிக காற்று வீச்சுகள் மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பு பெறத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இப்புயல் எதிர்வரும் அக்டோபர் 28 ஆம் திகதியளவில் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் ஊடாக கரையைத் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு, அதன் பின்னர் இதன் தாழ்வு நிலை படிப்படியாகக் குறையும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

