சஷி வீரவன்சவின் மேன்முறையீட்டு மனு நவம்பர் 18இல் பரிசீலனைக்கு: உயர் நீதிமன்றம் உத்தரவு
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

சட்டவிரோதமான முறையிலான இராஜதந்திரக் கடவுச்சீட்டைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்ச தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன, நீதிபதிகள் அச்சல வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு வந்தபோதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
போலியான தகவல்களைச் சமர்ப்பித்து, சட்டவிரோதமான முறையில் இராஜதந்திரக் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்டமைக்காக, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் சஷி வீரவன்சவிற்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், 1,00,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
நீதவான் நீதிமன்றின் இந்தத் தீர்ப்பிற்கு எதிராக சஷி வீரவன்சவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது. எனினும், மனுவை பரிசீலித்த மேல் நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம் அளித்த 2 ஆண்டுகால சிறைத்தண்டனையை உறுதிசெய்து தீர்ப்பளித்தது.
இதனையடுத்து, மேல் நீதிமன்றின் அந்தத் தீர்ப்பையும் எதிர்த்து சஷி வீரவன்ச தரப்பினால் உயர் நீதிமன்றத்தில் விசேட மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
தற்போது உயர் நீதிமன்றத்தில் இந்த மேன்முறையீட்டு மனு நிலுவையில் உள்ள நிலையில், சஷி வீரவன்ச பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மனு மீதான அடுத்த கட்ட பரிசீலனை நவம்பர் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

