செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் – தமிழ் அரசியல் பிரதிநிதிகளுக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க அழைப்பு!

Meiveli Media Team

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மற்றும் தற்போதைய நிலைவரம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் அல்லது சந்தேகங்கள் காணப்பட்டால், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் நீதி அமைச்சருடன் கலந்துரையாட முடியும் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஒருதரப்பு நிலைப்பாட்டில் இருந்து மாத்திரம் குற்றச்சாட்டுகளை முன்வைக்காமல், வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அனைவரும் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நச்சு, அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் மிகவும் உணர்வுபூர்வமானதும் கொடூரமானதுமான விடயம் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த விவகாரத்தில் அரசாங்கம் ஒருபோதும் எதிரான நிலைப்பாட்டை எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். அகழ்வுப் பணிகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக ஆரம்பத்திலிருந்தே போதிய நிதி ஒதுக்கப்பட்டதுடன், அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும்,  மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை குறித்து மாறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், குறித்த அறிக்கை தனிநபர் ஒருவரால் மாத்திரம் தயாரிக்கப்படவில்லை என்றும், நீதிபதிகளின் கண்காணிப்பின் கீழேயே அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். தேசியப் பொறிமுறைக் கட்டமைப்பு பலவீனமடையும் சந்தர்ப்பத்திலேயே சர்வதேசப் பொறிமுறையை நாட வேண்டிய நிலை ஏற்படும் எனவும், செம்மணி விவகாரத்தில் தேசியப் பொறிமுறை வலுவாகக் காணப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன், தனிநபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது எதிர்கால நடவடிக்கைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதேவேளை,வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விவகாரங்களில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.