கோவையில் சாதியப் பாகுபாடு – 15 வயது மாணவனின் தற்கொலை தொடர்பில் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!
Meiveli Media Team

தமிழகத்தின் கோவையில், பாடசாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சாதியப் பாகுபாட்டினால் 15 வயதுடைய மாணவன் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், மாணவனின் மரணத்துக்குக் காரணமான அனைவரையும் கைது செய்யாமல் இருப்பதாகக் கூறி தமிழக அரசைக் கண்டித்துள்ளார். பாடசாலையில் மாணவர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தபோது, குறித்த மாணவன் மாட்டிறைச்சி உண்பதாகக் கூறியதைத் தொடர்ந்து, அவர் சாதிய ரீதியான துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலே மாணவனின் தற்கொலைக்குக் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திராவிட முன்னேற்றக் கழகம், முற்போக்கு அமைப்புகள், மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டங்களில் ஈடுபட்ட பின்னரே பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள உதயநிதி ஸ்டாலின், பாடசாலைகள் சாதியப் பாகுபாட்டுக்கும் வன்கொடுமைகளுக்கும் இடமளிக்கும் தளங்களாக மாறுவதைத் தடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

